மயிலாடுதுறை: மயிலாடுதுறை தாலுகா, மணல்மேடு அருகே முடிகண்டநல்லூர் ஊராட்சி மேலத்தெருவை சேர்ந்தவர், ஜெயராமன். இவர் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தன்னுடைய இரண்டு ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து ஒருஜோடி மாடுகளை வளர்த்து பராமரித்து வந்துள்ளார். இவரது மகன் அருண்குமார் படித்து முடித்துவிட்டு வேலை தேடி வருகிறார்.
இந்த நிலையில் விவசாயத்தை மட்டுமே பிரதானத் தொழிலாக செய்துவந்துள்ள ஜெயராமன், கடந்த குறுவை மற்றும் சம்பா பருவத்தில் தனது இரண்டு ஏக்கர் நிலத்தில் நெற்பயிர்களைப் பயிரிட்டு விவசாயம் செய்து வந்துள்ளார். ஆனால், கனமழையின் காரணமாக அவர் பயிரிட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து செலவைக் கட்டுப்படுத்த முடியாமல் தவித்த ஜெயராமன் ஒருகட்டத்தில் உறவினர்கள் மற்றும் வீட்டில் இருந்த நகைகளை தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் (ஐஓபி) தனது மகன் மற்றும் மனைவி பெயரில் ரூ.5 லட்சம் வரை கடன் பெற்றுள்ளார்.
பின்னர் அந்தப் பணத்தை வைத்து விவசாயம் மேற்கொண்ட ஜெயராமனுக்கு பருவமழையாலும், பருவம் தவறி பெய்த மழையாலும் சம்பா பொய்த்துப்போனது. தொடர்ந்து உளுந்து பயிரிட்டுள்ளார். உளுந்தும் போதிய விளைச்சலைத் தரவில்லை. நகைக்கடனை அடைக்கமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டதால் மன உளைச்சலில் இருந்த ஜெயராமன் கடந்த சனிக்கிழமை (மார்ச் 26) தற்கொலையால் உயிரிழந்தார்.
இதுதொடர்பாக உறவினர் அளித்தப் புகாரின்பேரில் விளைச்சல் சரியில்லாத காரணத்தால் மன உளைச்சல் ஏற்பட்டு தற்கொலையால் உயிரிழந்ததாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். உயிரிழந்த விவசாயி ஜெயராமன் வீட்டிற்கு விவசாய சங்கத்தைச் சேர்ந்த பலர் நேரடியாக சென்று ஆறுதல் தெரிவித்தனர். மேலும் வங்கியில் அவர் பெற்ற கடனைத் தள்ளுபடி செய்து விவசாயி ஜெயராமனின் மகனுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என விவசாய சங்க நிர்வாகிகள் கோரிக்கை வைத்தனர்.
இதையும் படிங்க: பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பைக் ரேஸ் - மூவர் கைது