மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே பெரம்பூர் காவல் சரகத்துக்கு உட்பட்ட அன்னவாசல் வடக்கு காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஞானசேகரன். இவரது வீட்டின் பின்புறம் அதே ஊரைச் சேர்ந்த காமராஜ் என்பவருக்குச் சொந்தமான கொல்லை உள்ளது. அக்கொல்லைக்குச் செல்ல ஞானசேகரனின் இடத்தை காமராஜ் விலைக்குக் கேட்டுள்ளார்.
இதற்கு ஞானசேகரன் மறுத்ததைத் தொடர்ந்து வழக்குத் தொடுக்கப்பட்டு நிலுவையில் உள்ளது. இடப்பிரச்சினை தொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், நேற்று காலை (ஆகஸ்ட்18) காமராஜ் மற்றும் 10 பேர் கொண்ட கும்பல் ஞானசேகரனைச் சரமாரியாகத் தாக்கி, கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.
இதையடுத்து, ஞானசேகரன் தனது மனைவி, குழந்தைகளுடன் மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகம் முன் தன்னையும், தன் குடும்பத்தினரையும் கொலை செய்துவிடுவதாக மிரட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இது குறித்து காவல் ஆய்வாளர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தைத் தொடர்ந்து கலைந்து சென்றனர்.
இது குறித்து ஞானசேகரன் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
இதையும் படிங்க: ஊத்தாப்பம் கேட்டு கத்தியுடன் ரகளையில் ஈடுபட்ட இளைஞர்கள்!