பழனி: பழனி மலையடிவாரத்திலுள்ள தேவஸ்தான தங்கும் விடுதிக்கு சைரன் பொருத்திய காரில் வந்த நபர் ஒருவர் மாவட்ட ஆட்சியர் எனக் கூறி அங்கிருந்தவர்களிடம் அறிமுகமாகியுள்ளார். மேலும், தங்குவதற்கு இலவசமாக அறை வழங்குமாறும் கேட்டுள்ளார்.
வழக்கமாக ஆட்சியர்கள் வந்தால் உள்ளூர் வருவாய்த்துறை அலுவலர்கள் முன்கூட்டியே தகவல் தெரிவித்துவிடுவதால் தங்கும் விடுதி மேலாளருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ஆட்சியர் எனக் கூறியவரிடம் மேலாளர் அடையாள அட்டையைக் கேட்டுள்ளார்.
மேலும், பழனியிலுள்ள வருவாய்த்துறை அலுவலர் ஒருவரை பரிந்துரை செய்யுமாறும் கேட்டுள்ளார். அப்போது, அந்நபர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால், பழனி அடிவாரம் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

ஆட்சியர் எனக் கூறி ஏமாற்றியவர் கைது
இதனையறிந்த அந்த ஆசாமி காரை விட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். பின்னர், அவரை துரத்திச் சென்ற கோயில் ஊழியர்கள் மடக்கிப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து, காவல் துறையினர் அவரிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர் மயிலாடுதுறையைச் சேர்ந்த குமார் என்பது தெரியவந்தது. மேலும், இவர் காரில் சைரன் பொருத்திக் கொண்டு, தமிழக அரசு என்று பதாகையை மாட்டிக்கொண்டு ஊருக்குள் வலம் வந்ததும் தெரியவந்தது. பல இடங்களில் தன்னை ஆட்சியர் எனக் கூறி சலுகைகளைப் பெற்று அனுபவித்ததும் தெரியவந்துள்ளது.

கடைசியாக மதுரை மீனாட்சி அம்மன் கோயில், திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குச் சென்ற குமார், தன்னை ஆட்சியர் எனக் கூறி சிறப்பு தரிசனம் செய்துவிட்டு வந்துள்ளார். இதையடுத்து, குமாரை கைது செய்த பழனி அடிவாரம் காவல் துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: போலி ஆவணங்கள் மூலம் கூட்டுறவு வங்கியில் ரூ 1.45 கோடி கையாடல்