மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் இருந்து சித்தமல்லி சென்ற 1ஏ என்ற அரசுப்பேருந்தில் ஓட்டுநர் குமரேசன்(42), நடத்துநர் பூவராகவன் ஆகியோர் பணியில் இருந்தனர். மயிலாடுதுறையில் இருந்து சித்தமல்லிக்கு 60க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசு பேருந்து சென்றுள்ளது.
பட்டவர்த்தி அருகே ஆலமரத்தடியில் கஞ்சா போதையில் இருந்த சில இளைஞர்கள் வாட்டர் பாட்டிலில் உள்ள தண்ணீரை பயணிகள் மீது பீய்ச்சி அடித்தும், மற்றொரு இடத்தில் பேருந்தை காலால் எட்டி உதைத்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், சித்தமல்லி சென்ற அரசுப்பேருந்து மீண்டும் மயிலாடுதுறை நோக்கி வந்தபோது விராலூர் அருகே சாலையின் குறுக்கே இருசக்கர வாகனத்தை நிறுத்தி மதுபோதையில் நின்றிருந்த 3 வாலிபர்களால் பேருந்து செல்லமுடியவில்லை.
இதனால் கீழே இறங்கிச் சென்ற ஓட்டுநர் குமரேசன் இளைஞர்களை ஓரமாக செல்லும்படி கேட்டுக்கொண்டார். போதையில் இருந்த இளைஞர்கள் மாறிசெல்லவேண்டியதுதானே என்று கூறி தகறாறு செய்துள்ளனர். இதனால் தனது செல்போனை எடுத்து இளைஞர்களின் அட்டூழியத்தை படம் பிடித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் ஓட்டுநரின் செல்போனை பறித்து சாலையில் வீசி எறிந்துள்ளனர். தொடர்ந்து வந்த 7 இளைஞர்களுடன் சேர்ந்து 10பேர் பேருந்திற்குள் சென்ற ஓட்டுநர் குமரேசனை சராமாரியாக தாக்கி பேருந்து கண்ணாடியை அடித்து உடைத்து ரகளையில் ஈடுபட்டனர்.
இளைஞர்கள் நெஞ்சிலும் வயிற்றிலும் உதைத்ததால் காயமடைந்த ஓட்டுநர் குமரேசனை அப்பகுதி மக்கள் மீட்டு 108 ஆம்பூலன்ஸ் மூலம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போதை ஆசாமிகள் பேருந்து நிறுத்தத்தில் உள்ள இருக்கைகளையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.
இச்சம்பவம் அறிந்த மணல்மேடு காவல்துறையினர் அரசுப்பேருந்தை மணல்மேடு காவல்நிலையம் எடுத்துச் சென்றனர். மேலும், வழக்குப்பதிவு செய்து ஓட்டுநரை தாக்கிவிட்டு பேருந்தை சேதப்படுத்திய இளைஞர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ரகளையில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தாக்கப்பட்ட ஓட்டுநர் குமரேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: கார்த்தி சிதம்பரம் வீட்டில் சிபிஐ திடீர் சோதனை - பின்னணி என்ன ?