சீர்காழியில் கடந்த 27ஆம் தேதி நகைக்கடை வியாபாரி தன்ராஜ் செளத்திரி வீட்டில் தன்ராஜ் செளத்திரி மனைவி ஆஷா, மகன் அகில் ஆகிய இருவரை கொலை செய்துவிட்டு 4 பேர் கொண்ட கும்பல் 12 கிலோ தங்கத்துடன் தப்பிச் சென்றது.
இதில் மனீஷ், ரமேஷ் பட்டேல், கருணாராம் ஆகிய 3 பேர் கைதுசெய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். மஹிபால்சிங் என்பவர் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டு சீர்காழி அரசு மருத்துவமனையில் உடல் வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (ஜன. 29) மயிலாடுதுறை விரைவு நீதிமன்ற நீதிபதி, சீர்காழி குற்றவியல் நீதிமன்ற நீதிபதியுமான (பொறுப்பு) அமிர்தம் முன்னிலையில் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்து வந்த மருத்துவர்கள் நவீன், சிவக்குமார் ஆகியோர் உடற்கூறு ஆய்வுசெய்தனர்.
உடற்கூராய்வினை முழுவதுமாக காணொலியாகப் பதிவுசெய்தனர். அதனைத் தொடர்ந்து, கொள்ளையன் மஹிபால்சிங் உடல் காவல் துறை நடைமுறைகளுக்குப்பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
உடலைப் பெற்றுக்கொண்ட உறவினர்கள் சீர்காழியிலிருந்து அமரர் வாகனத்தில் சென்னை விமான நிலையம் எடுத்துச்சென்று, அங்கிருந்து அவர்களின் சொந்த ஊரான ராஜஸ்தான் மாநிலம் அகோலிக்கு விமானம் மூலம் கொண்டுசெல்லவுள்ளனர்.
இதையும் படிங்க: சேர்த்தால் உதயம்; தவிர்த்தால் அஸ்தமனம் - திமுகவை மிரட்டும் அழகிரி பிறந்தநாள் சுவரொட்டிகள்