நாகப்பட்டினம்: நடிகரும், தேமுதிக நிறுவனத் தலைவருமான விஜயகாந்த், கடந்த ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது மறைவிற்கு திரைப்படத் துறையினர், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் என பலர் அஞ்சலி செலுத்தினர். மேலும், தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என அனைவரும் அவரது நினைவைப் போற்றும் வகையில், பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர்.
அந்த வகையில், மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை சின்னக்கடைத் தெருவில் வைத்திலிங்கம் என்பவர் காய்கறி கடை நடத்தி வருகிறார். நடிகர் விஜயகாந்த்தின் தீவிர ரசிகரான இவர், விஜயகாந்த் கட்சி தொடங்கிய பின்னர், கட்சியில் அடிப்படை உறுப்பினராக இணைந்து, தற்போது தேமுதிக மாநில செயற்குழு உறுப்பினராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், இவர் பொங்கல் திருநாளை முன்னிட்டு, இவரது காய்கறி கடை வாசலில், மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவைப் போற்றும் வகையில், பொதுமக்கள் 500 பேருக்கு இலவசமாக கரும்புகளை வழங்கினார். முன்னதாக, அடுக்கி வைக்கப்பட்ட கரும்பின் மீது விஜயகாந்த்தின் உருவப்படத்தை வைத்து, மாலை அணிவித்து மலர் தூவி வணங்கி அஞ்சலி செலுத்தினார்.
மேலும் மயிலாடுதுறையில் பொங்கல் கரும்பு ஒன்று ரூபாய் 30 முதல் 50 வரை விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், இந்த கடையில் இலவசமாக கரும்பு வழங்கப்படுவது குறித்து தகவல் அறிந்த பொதுமக்கள், சில நிமிடங்களிலேயே அங்கு குவிந்து காணப்பட்டனர். இந்நிலையில், இந்த செயல் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க: கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் என்ன தான் பிரச்சனை? பயணிகள் தரப்பில் கூறுவது என்ன..?