மயிலாடுதுறை: சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பினர், கிராம மக்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கையில் மண்சட்டி ஏந்தி கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், ஊராட்சி நிர்வாகத்தில் தலையிடும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்களை கண்டித்தும், நூறு நாள் வேலைத்திட்டத்தை ஊராட்சியில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கு வழங்க வலியுறுத்தப்பட்டது.
மேலும், ஊராட்சி மன்ற தலைவர்களால் பணியமர்த்தப்பட்ட பணித்தள பொறுப்பாளர்களை நீக்கும் அலுவலர்களின் தன்னிச்சையான முடிவை கண்டித்தும், ஒன்றிய அரசின் 15ஆவது மானிய நிதியை கிராம ஊராட்சியின் வளர்ச்சியை தவிர வேறு எந்த திட்டத்திற்கும் ஊராட்சி மன்றத் தலைவரின் அனுமதியின்றி அலுவலர்கள் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது.
ஊராட்சி செயலாளர்களுக்கு ஊதியத்தை தனியாக நிதி ஒதுக்கீடு செய்து வழங்க வேண்டும். ஊராட்சிமன்ற செயலர்கள் ஊராட்சி மன்ற தலைவரின் அனுமதி, ஆலோசனை இல்லாமல் புதிய செயலர்கள் பணிநியமனம் பணியிட மாறுதல் செய்ய கூடாது.
ஊராட்சிகளுக்கு வழங்கப்பட வேண்டிய சரியான நிதியை சில ஊராட்சிகளுக்கு திட்டமிட்டு வழங்கப்படாமல் தடுக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: Gambling arrest - ஆபாச வார்த்தைகளால் அர்ச்சனை செய்த சூதாட்ட கும்பல் கைது