நாகப்பட்டினம் மாவட்டத்தில் தற்போது குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், சென்ற சம்பா பருவத்தில் அறுவடை செய்யப்பட்டு அரசு நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்ய பட்ட நெல் மூட்டைகள் பல்வேறு கட்டங்களாக வெளிமாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நாகை மாவட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த திருப்பூண்டி, சன்னமங்கலம், காடம்பாடி, அருந்தவன்புலம், கொத்தங்குடி, சாட்டிய குடி, ஆயக்காரன்புலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள திறந்தவெளி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்த இரண்டாயிரம் மெட்ரிக் டன் சம்பா சி.ஆர் 1009 ரக நெல், 62 பெட்டிகள் கொண்ட சரக்கு ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த நெல் மூட்டைகள், மதுரை மாவட்டம், கூடல் நகர், விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை உள்ளிட்ட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக சேமிப்புக் கிடங்குகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
அங்கிருந்து தனியார் அரவை மில், நுகர்பொருள் வாணிபக் கழக அரவை மில்கள் ஆகியவற்றின் மூலம் அரிசியாக மாற்றி அங்கிருந்து பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படவுள்ளது என, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் சண்முகநாதன் தெரிவித்துள்ளார்.