நாகை மாவட்டம், முட்டம் பனங்குடியில் அமைந்துள்ளது மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான சிபிசிஎல். இந்நிறுவனத்தில் நாகை சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் ஒப்பந்தத் தொழிலாளர்களாக பணி புரிந்து வந்தனர்.
இந்நிலையில் இங்கு கடந்த ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி ஆலையின் விரிவாக்கத்திற்காக எண்ணெய் சுத்திகரிப்பு உற்பத்தி பணிகள் நிறுத்தப்பட்டன. இதனால் அங்கு பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணிகள் இழக்கும் சூழல் ஏற்பட்டதால், அவர்கள் பலகட்டப் போராட்டங்களை நடத்தி வந்தனர். இதனிடையே அரசின் சார்பாக நிறுவனம், தொழிலாளர்களிடையே நடைபெற்ற மூன்று கட்ட பேச்சு வார்த்தைகள் தோல்வியில் முடிந்தன.
இதனால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்த 96 ஒப்பந்தத் தொழிலாளர்கள் நாகை மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயரிடம் தங்களை கருணைக் கொலை செய்திடக் கோரி மனு அளித்ததால் அங்கு பரபரப்பு நிலவியது.
சிபிசிஎல் எண்ணெய் நிறுவன விரிவாக்கத்திற்கு இடம் வழங்கிய தங்களுக்கு 26 ஆண்டுகளாக நிரந்தர பணி வழங்கப்பட வில்லை என்றும், இடத்தையும் கொடுத்து வாழ்வாதாரத்தையும் இழந்து தவித்து வருவதால் கருணைக் கொலை செய்திட அரசை நாடி உள்ளதாகவும் தொழிலாளர்கள் வேதனையுடன் கூறியுள்ளனர்.
இதையும் படிங்க:
பயன்பாடற்ற ஆழ்துளைக் கிணறுகளை மூட புதுக்கோட்டை - நாகை ஆட்சியர்கள் நடவடிக்கை