நாகை மாவட்டம், திருமருகல் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 39 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிந்து ஊராட்சி மன்றத் தலைவர்கள் பொறுப்பேற்று ஆறு மாதங்கள் கடந்துள்ளன. எனினும் அவர்களுக்கு எந்த விதமான அதிகாரங்களும் இதுவரை வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
மேலும் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் நடைபெறும் வேலைகளுக்கு பணிதள பொறுப்பாளர்களை நியமனம் செய்வது, அவர்களுக்கு ஊதியம் வழங்குவது உள்ளிட்ட பணிகளில், திருமருகல் ஒன்றியக் குழு தலைவரும் அதிமுக ஒன்றிய செயலாளருமான ராதாகிருட்டிணன், வட்டார வளர்ச்சி அலுவலர் அன்பரசன் இருவரும் தன்னிச்சையாக முடிவெடுத்து வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இது குறித்து இவர்கள் இருவர் மீதும் விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரி திமுக ஊராட்சி மன்றத் தலைவர்கள் நாகை மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி நாயரிடம் நேற்று (ஜுன் 23) புகார் மனு அளித்தனர்.
அப்போது 2019-2020ஆம் ஆண்டிற்கான ஊராட்சி வரவு, செலவு கணக்குகளை வருகிற ஆகஸ்ட் மாதம் தனி அலுவலர்கள் தணிக்கை செய்ய உள்ள நிலையில், திருமருகல் ஊராட்சி ஒன்றியச் செயலாளர்கள் அனைவரையும் ஊராட்சி மன்றத் தலைவர்களின் ஒப்புதல் இல்லாமல், வட்டார வளர்ச்சி அலுவலர் ஒட்டுமொத்தமாகப் பணியிட மாற்றம் செய்துள்ளதாகவும் திமுக ஊராட்சி மன்றத் தலைவர்கள் குற்றம் சாட்டினர்.
இது குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் திருமருகல் ஒன்றியக் குழு தலைவர், வட்டார வளர்ச்சி அலுவலர் இருவருக்கும் எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப் போவதாக திமுக ஊராட்சி மன்றத் தலைவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க... ஆளுங்கட்சியினர் மீது ஊராட்சி மன்றத் தலைவர்கள் புகார் மனு!