நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக ஹேமா என்பவர் பணியாற்றிவருகிறார். கடந்த சில நாள்களாக இவருக்கு கல்லூரி முதல்வர் (பொறுப்பு) துரைராஜன் அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் எல்லைமீறிய துரைராஜன் கையெழுத்து வாங்கச் சென்ற ஹேமாவிடம் தனது பாலியல் இச்சைக்கு அடிபணியும்படி கூறியுள்ளார்.
துரைராஜனின் செயலால் மன உளைச்சலுக்கு ஆளாகி பொறுமையிழந்த ஹேமா, கல்லூரியில் நடந்ததை கணவரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து, துரைராஜனை செல்ஃபோனில் தொடர்புகொண்டு தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும் கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து ஹேமா துரைராஜன் மீது திருக்குவளை காவல் நிலையத்தில் ஆடியோ ஆதாரங்களுடன் பாலியல் புகார் அளித்தார்.
உதவி பேராசிரியரிடம் புகாரை பெற்றுக் கொண்ட திருக்குவளை காவல் துறையினர், இது குறித்து பல்கலைக்கழக தலைமையகத்துக்கு தகவல் தெரிவித்தனர். இது ஒருபுறமிருக்க அவர் கொடுத்தது பொய் புகார் என்று பல்கலைக்கழக முதல்வருக்கு ஆதரவாக கல்லூரியில் மாணவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
எனவே, பல்கலைக்கழகத்தில் நடந்தது என்ன? என்பது குறித்து விசாரணைக் குழு அமைத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்களும் பெற்றோரும் அரசுக்கு கோரிக்கைவைத்துள்ளனர். இதனிடையே, துரைராஜன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து முன்னணி, மகளிர் அமைப்புகள் சார்பாக திருக்குவளை சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.