மயிலாடுதுறை: கடந்த மாதம் 30-ம் தேதி தொடங்கி டெல்டா மாவட்டங்களில் பெய்த பருவம் தவறிய தொடர்மழையின் காரணமாக டெல்டா மாவட்டம் முழுவதும் சுமார் 1 லட்சத்து 27 ஆயிரம் ஹெக்டேரில் பயிரிடப்பட்டிருந்த சம்பா, தாளடி பயிர்கள் வயலில் சாய்ந்து நீரால் சூழப்பட்டு பாதிக்கப்பட்டது.
குறிப்பாக, மயிலாடுதுறை மாவட்டத்தில் பயிரிடப்பட்ட 68ஆயிரம் ஹெக்டர் பயிர்களில் சுமார் 20 சதவீத பயிர்கள் அதாவது 14ஆயிரம் ஹெக்டேரில் பயிரிடப்பட்டிருந்த சம்பா, தாளடி பயிர்கள் மழை நீரில் சாய்ந்து பாதிப்புக்கு உள்ளானது. இதையடுத்து டெல்டா மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர்கள் சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில் விவசாயிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் நிவாரணம் அறிவித்தார்.
இந்த நிவாரணத்தொகை போதுமானதாக இல்லை என விவசாயிகள் அதிருப்தி தெரிவித்து வரும் நிலையில், நெல்லின் ஈரப்பதத்தை உயர்த்தி கொள்முதல் செய்ய கோரிக்கை விடுத்தனர். இதனிடையே நெல்லின் ஈரப்பதத்தை 22 சதவீதமாக உயர்த்தி கொள்முதல் செய்ய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பி இருந்தார்.
இதன் தொடர்ச்சியாக டெல்டா மாவட்டங்களில் மத்தியக்குழுவினர் நெல்லின் ஈரப்பதம் குறித்து இன்று ஆய்வு மேற்கொண்டனர். பெங்களூரு தரக்கட்டுப்பாடு மைய தொழில்நுட்ப அதிகாரி யூனுஸ் தலைமையிலான மத்தியக் குழுவினர் இந்த ஆய்வை மேற்கொண்டனர். இன்று காலை நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஐந்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள் தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுகாவில் உள்ள மங்கைநல்லூர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் இந்த ஆய்வினை மேற்கொண்டனர்.
அப்போது நெல்லின் ஈரப்பதத்தை கருத்தில் கொள்ளாமல் 2002ஆம் ஆண்டில் கொள்முதல் செய்தது போன்று, தற்போதும் கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். ஆய்வின் முடிவில் நெல் மாதிரிகளை சீல் வைத்து குழுவினர் எடுத்துச்சென்றனர். இந்த நெல் மாதிரியானது இந்திய உணவுக் கழக தரக் கட்டுப்பாட்டு அலுவலகத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு, அங்கு ஈரப்பதம் பரிசோதனை செய்யப்பட்டு பின்னர் மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து தரங்கம்பாடி தாலுகாவில் செம்பனார்கோவில், சீர்காழி தாலுகாவில் வைத்தீஸ்வரன்கோவில், மயிலாடுதுறை தாலுகாவில் ஆனந்ததாண்டவபுரம் மற்றும் மூவலூர் ஆகிய இடங்களில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மத்தியக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, கோட்டாட்சியர் யுரேகா, மாவட்ட வேளாண் இயக்குநர் சேகர், நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் உமாமகேஸ்வரி உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க: தேனி மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக 20 சதவீத மாம்பூக்கள் சேதம்!