மயிலாடுதுறை: சீர்காழி அருகே வடகால் காயிதே மில்லத் தெருவில், தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் சார்பில் முதலமைச்சர் மருத்துவ காப்பீடு திட்டத்தில் புதிதாக பயனாளிகள் விண்ணப்பிக்கும் முகாம் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இதற்கு அப்பகுதியை சேர்ந்த ஒரு தரப்பினர் முகாம் இங்கு நடத்தக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து சீர்காழி காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர்.
பேச்சு வார்த்தை
இதனையடுத்து முகாம் நடைபெற சனிக்கிழமை (ஆக 28) காலையிலேயே இருதரப்பையும் சீர்காழி காவல்நிலையம் அழைத்து காவல் துணை கண்காணிப்பாளர் லாமேக் பேச்சுவார்த்தை நடத்தினார்.
மேலும் மருத்துவ காப்பீடு திட்டத்தில் விண்ணப்பிக்கும் முகாமை அதே ஊராட்சியில் மாற்று இடத்தில் நடத்திடவும், அதற்கு வருபவர்களை தடுக்கவோ, எதிர்ப்பு தெரிவிக்கவோ கூடாது எனவும், யாரையும் முகாமிற்கு வற்புறுத்தி அழைத்து வரக்கூடாது எனவும் எழுத்துபூர்வமாக அறிவுறுத்தினார்.
அதன்பின்னர் வடகாலில் காவலர் பாதுகாப்புடன் முகாம் நடந்தது. முகாமில் திரளான பொதுமக்கள் முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் தங்களது குடும்பஅட்டை, ஆதார் கார்டு கொண்டுவந்து பதிவு செய்துக்கொண்டனர்.