மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பலகட்ட போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. அதன் ஒருபகுதியாக நாகூர் மக்கள் கூட்டமைப்புச் சார்பாக மத்திய அரசைக் கண்டிக்கும்விதமாக பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.
இந்தப் போராட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, சமூக செயற்பாட்டாளர் சுந்தரவள்ளி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.ஜி.கே. நிஜாமுதீன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு உள்ளிட்டவைக்கு எதிராகக் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. தொடர்ந்து, குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும், குடியுரிமை சட்டத்திற்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும், குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மற்ற மாநிலங்களைப் போல தமிழ்நாடு அரசும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட ஆறு தீர்மானங்கள் பொதுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
பொதுக்கூட்டத்தில் பெண்கள் உள்பட இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்றனர்.
இதையும் படிங்க...சும்மா பேச்சுக்கு ட்ரம்பை கலாய்த்த ஆர்ஜிவி