நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா பரசலூர் மகாராஜபுரம் பகுதியில் வசித்து வருபவர்கள் காந்திமதி, மணிமேகலை, சம்பத். இவர்களின் தாயார் அலமேலு உயிரிழந்ததையடுத்து, ஒரு ஏக்கர் நிலத்தில் குறுவை சாகுபடி நடவு செய்து விவசாயம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், இவர்களது கடைசித் தம்பி யோசுவா பாரத் ஒரு ஏக்கர் நிலத்தை அலமேலு தனக்கு எழுதி வைத்து விட்டதாகக் கூறி நடவு செய்யப்பட்ட நெற்பயிர்களை உழவடிக்கும் டிராக்டரால் சேதப்படுத்தி விவசாயம் செய்யக் கூடாது என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.
இச்சம்பவம், குறித்து செம்பனார்கோவில் காவல் நிலையத்தில் காந்திமதி புகார் அளித்தார். அதன்படி, முறைகேடாக வருவாய்த்துறையினரை ஏமாற்றி வாரிசு சான்று பெற்று அலமேலுவிடமிருந்து நிலத்தை எழுதி வாங்கிய யோசுவா பாரத் தங்களைச் சாகுபடி செய்ய விடாமல் தடுத்ததால் பிரச்னை ஏற்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், அலமேலு உயிரிழந்ததால் தற்போது தாங்கள் சாகுபடி செய்த பயிர்களைச் சேதப்படுத்தி நிலத்தை உரிமை கொண்டாடுவதாகவும் இது குறித்து செம்பனார்கோவில் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காமல் நீதிமன்றம் மூலம் பிரச்சினையை சமரசமாக முடித்துக் கொள்ளும்படி கூறி நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.