நாகை: மயிலாடுதுறை- கும்பகோணம் சாலையில், மயிலாடுதுறை ரயில்வே ஜங்ஷன் அருகே 1975ஆம் ஆண்டு பயன்பாட்டுக்கு வந்த மேம்பாலம் தியாகி சாரங்கபாணி நினைவு மேம்பாலம் என்று அழைக்கப்படுகிறது. மயிலாடுதுறையின் நுழைவுவாயிலாக இந்த மேம்பாலம் கருதப்படுகிறது. அவ்வப்போது, இப்பாலம் பழுதாவதும் அதை நெடுஞ்சாலைத்துறையினர் பழுதுபார்த்து வருவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது.
இப்பாலத்தில், இருபுறமும் உள்ள தடுப்புச்சுவர், விரிசல் ஏற்பட்டு பழுதடைந்து, சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுந்து வருகின்றன. தடுப்புச்சுவரை ஒட்டி அதிகளவில் மக்கள் நடந்து செல்கின்றனர். மேலும், காலை, மாலை நேரத்தில் பொதுமக்கள் பாலத்தின் கீழே இரண்டு பக்கங்களிலும் கூடுவது வாடிக்கையாக உள்ளது.
இந்நிலையில், நேற்று இருசக்கரவாகனம் பாலத்தின் பக்கவாட்டுச்சுவரில் மோதியதில் கைப்பிடிச்சுவர் இடிந்து விழுந்தது. மீதமுள்ள சுவர்களின் காரைகளும் பெயர்ந்து பாலத்தின் கீழே நடந்து செல்லும் மக்களின் மேல் விழும் அபாய நிலையில் உள்ளது. இடிந்து விழும் நிலையிலுள்ள பக்கவாட்டுச் சுவரினை விபத்துகள் ஏற்படும் முன்பு சீரமைத்து தரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: முடவன் முழுக்கு: காவிரியில் நீராடிய பக்தர்கள்