மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான ஸ்ரீகுருஞானசம்பந்தர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் நடப்பாண்டு 200 மாணவர்கள் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ளனர். மாணவர்கள் மாதா, பிதா, குரு மற்றும் தெய்வத்திடம் ஆசிபெறும் ஆசிர்வாத திருநாள் நிகழ்ச்சி அப்பள்ளியின் சார்பில் இன்று (பிப்.26) நடத்தப்பட்டது.
பள்ளிச்செயலர் திருநாவுக்கரசு தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில், மாணவர்கள் தங்கள் தாய் தந்தையருக்கு பாத பூஜை செய்து வழிபட்டனர். இதனைத்தொடர்ந்து, பெற்றோர் தங்கள் குழந்தைகளை அட்சதைத் தூவி கண்ணீருடன் ஆரத்தழுவி ஆசீர்வதித்தனர். இதைத்தொடர்ந்து ஆசிரியர்கள் வரிசையாக நின்று மாணவர்களுக்கு மலர்த்தூவி அதிக மதிப்பெண் எடுக்க வாழ்த்து தெரிவித்தனர்.
பின்னர், பள்ளியின் முகப்பில் வைக்கப்பட்டிருந்த தருமபுரம் ஆதீனம் 27-வது ஒரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் மற்றும் சரஸ்வதி தேவி படங்களின் முன்பு வணங்கி ஆசீர்வாதம் பெற்றனர். பின்னர், சுவாமிக்கு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து மாணவர்களுக்கு தேர்வு எழுதுவதற்கான பேனா, பென்சில், ஸ்கேல் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டன. பெற்றோரும் தங்களது குழந்தைகள் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்றும் தருமபுரம் ஆதீனம் மடாதிபதி சரஸ்வதி தேவி படங்களின் முன்பு வணங்கிச் சென்றனர். பள்ளியில் முதல்முறையாக நடைபெற்ற இந்த நிகழ்வு மாணவர்கள் மத்தியில் தன்னம்பிக்கையை ஏற்படுத்துவதாக அமைந்தது.
இதையும் படிங்க: விவசாயிகள் கவனத்திற்கு - இடைத்தரகர் இன்றி அறுவடை இயந்திரங்கள்... உழவன் செயலியில் உள்ள முக்கிய அம்சம்