நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே வசித்து வரும் விவசாயக் கூலித் தொழிலாளி ஆனந்த சேகர் - அக்ஷிதா தம்பதியரின் ஐந்து வயது மகள் நந்தினி கடந்த 6 மாதங்களாக கடும் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து, சிறுமி நந்தினிக்கு மயிலாடுதுறை, தஞ்சாவூர், சிதம்பரம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி, நோயின் தாக்கம் அதிகமானதால் நந்தினிக்கு உடல் உறுப்புகள் செயலிக்கத் தொடங்கின. மேலும், வலிப்பு நோயும் தாக்கியுள்ளது.
இந்நிலையில், உடல் நிலை மோசமான நந்தினி கடந்த மாதம் பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் நந்தினிக்கு மூளைக்காய்ச்சல் நோய் இருப்பதை உறுதி செய்தனர். அங்கு சிகிச்சை பெற்றுவந்த நந்தினி, சிகிச்சை பலனளிக்காமல் தற்போது பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அந்த கிராமத்து மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.