நாகை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் புதுச்சேரி மாநிலம் காரைக்காலிலிருந்து கடத்திவரப்பட்ட சாராய பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவது வாடிக்கையாகிவருகிறது.
இந்த நிலையில் நாகை மாவட்டம் கீழ்வேளூர் அடுத்துள்ள ஆனைமங்கலம் ஊராட்சியில் அளவுக்கு அதிகமாக வெளிமாநில சாராய பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுவந்தது.
இந்த நிலையில் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சாராய மூட்டைகளைக் கடத்திவந்த இருவரை ஓர்க்குடி பாலம் அருகே பொதுமக்கள் மடக்கிப் பிடித்தனர்.
அவர்களிடமிருந்து பொதுமக்கள் சாராய பாக்கெட்டுகளைப் பறிமுதல்செய்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்து ஒரு மணி நேரத்திற்குப் பிறகு சம்பவ இடத்திற்கு வந்த கீழ்வேளூர் காவல் துறையினர், சாராய பாக்கெட்டுகளையும், கடத்தல்காரர்களையும் கைதுசெய்தனர்.
நாகை அருகே சாராயம் கடத்தியவர்களைப் பொதுமக்கள் மடக்கிப் பிடித்து சாராயம் மூட்டைகளைப் பறிமுதல்செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.