மயிலாடுதுறை: ஆடி, தை, மற்றும் மஹாளய அமாவாசை உள்ளிட்ட முக்கிய தினங்களில், தங்கள் முன்னோர்களுக்கு புண்ணிய தீர்த்தங்களில் நீராடி பலிகர்ம பூஜை செய்து தர்ப்பணம் அளிப்பது நன்மை பயக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா ஊரடங்கு காரணமாக தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு இதற்கான தடை நீக்கப்பட்டது.
இந்நிலையில், மயிலாடுதுறை நகரின் நடுவே ஓடும் காசிக்கு நிகரான துலா கட்டமான காவிரி ஆற்றின் நடுவே 16 தீர்த்தக்கினறுகள் உள்ளது. இந்த காவிரி துலா கட்டத்தில் ஆடி அமாவாசையான இன்று, அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது முன்னோர்களுக்கு பலிகர்ம பூஜைகள் செய்து தர்ப்பணம் செய்து காவிரியில் புனித நீராடினர்.
மேலும் குடகு மலையில் உருவாகும் காவிரி ஆறு மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் கடலில் கலக்கிறது என்பது யாவரும் அறிந்ததே. அதன்படி ஆடி அமாவாசையை ஒட்டி, இன்று பூம்புகார் காவிரி சங்கமத்தில் தமிழ்நாடு முழுவதும் இன்றி, பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள், தங்கள் முன்னோர்களுக்கு பலிகர்ம பூஜைகள் செய்து தர்ப்பணம் கொடுத்து புனித நீராடி வருகின்றனர்.
இதற்காக சீர்காழி, மயிலாடுதுறை, பொறையார் பகுதியில் இருந்து பூம்புகாருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அதிகாலை முதலே பல்லாயிரக்கணக்கானோர் கூடியதால் பூம்புகார் கடை வீதியில் இருந்து காவிரி சங்கமம் வரை, சுமார் 1 கிலோமீட்டர் தூரத்திற்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதையும் படிங்க: ஆடி அமாவாசை: குமரி முக்கடல் சங்கமத்தில் சங்கமித்த மக்கள் கூட்டம்!