மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 11-ஆம் தேதி பெய்த வரலாறு காணாத கனமழையின் காரணமாக சீர்காழி, தரங்கம்பாடி தாலுகா பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்தன.
இந்நிலையில் தரங்கம்பாடி தாலுகா மாமாகுடி ஊராட்சி அப்புராஜபுரம்புத்தூர் கிராமத்தில் பாதிக்கப்பட்ட விளை நிலங்களை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பார்வையிட்டார். அப்போது அவரிடம் நீரில் மூழ்கி சேதம் அடைந்த பயிர்களை விவசாயிகள் காண்பித்து வேதனையை வெளிப்படுத்தினர்.
பின்னர், அப்புராஜபுரம்புத்தூர் கிராமவாசிகள் மற்றும் விவசாயிகள் 200 பேருக்கு 5 கிலோ அரிசி, மளிகை பொருட்கள், காய்கறி மற்றும் போர்வை ஆகியவற்றை நிவாரண உதவியாக டிடிவி தினகரன் வழங்கி ஆறுதல் தெரிவித்தார். அதனை தொடர்ந்து சீர்காழி தாலுகாவில் பயிர் பாதிப்புக்கு உள்ளான பல்வேறு பகுதிகளில் அவர் ஆய்வு செய்தார்.
முன்னதாக டிடிவி தினகரன் நிவாரண உதவிகளை வழங்கி தொடங்கி வைத்து சென்ற பின்னர், நிவாரண பொருட்களை பெற கிராம மக்கள் முண்டியடித்துக் கொண்டு முன்னேறியதால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்ததால் நிவாரண பொருட்களை நிர்வாகிகள் பொது மக்களிடம் தூக்கி வீசினர். இதனை பிடிப்பதற்காக பொதுமக்கள் முண்டியடித்ததால் கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு சிலர் மயக்கம் அடைந்தனர்.
இதையும் படிங்க: டாஸ்மாக் கடையில் பணம் கேட்டு மிரட்டிய 'கரூர் குரூப்'