நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை கச்சேரி சாலையைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவரது மனைவி ராஜராஜேஸ்வரி. ஜெயக்குமாருக்கும் அவரது சகோதரர் குடும்பத்தினருக்கிடையே சொத்து குறித்து பிரச்னை ஏற்பட்டு, இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் கடந்த மாதம் ஜெயக்குமாரை எதிர் தரப்பினர் தாக்கியபோது அவர்கள் மீது காவல் துறையினரிடம் புகார் அளித்தார். ஆனால், காவல் துறையினர் ஜெயக்குமார் மீதே வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதனால் மன உளைச்சலில் இருந்த ஜெயக்குமார், கடந்த மாதம் தற்கொலை செய்துகொண்டார். இந்நிலையில், அவர் இறந்த பின்பு அவருடைய டைரியில் தனது சாவிற்கு யார் காரணம் என்பது குறித்து எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று ராஜராஜேஸ்வரியிடம் சிக்கியது.
இதையடுத்து, ராஜ ராஜேஸ்வரி மயிலாடுதுறை கோட்டாட்சியரிடம் புகார் மனு அளித்தார். அதில், “எனது கணவர் இறப்புக்கு காரணம் யார் என்பது குறித்து அவர் எழுதிய கடிதம் கிடைத்துள்ளது. எனது கணவரை சொத்து பிரச்னைக்காக அவமானப்படுத்திய நபர்கள் மீதும், அவர்களுக்கு உடந்தையாக இருப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் என்னை மிரட்டி சொத்துக்களை எழுதி கொடுக்க வேண்டுமென்று என் மீதும் பொய் வழக்குகள் பதிவு செய்த காவல் துறையினர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து உயர் அலுவலர்கள் விசாரணை செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: வீரப்பன் சொத்துக்கு மோடி கையெழுத்திட வேண்டும்: திமுக பிரமுகர் மோசடி