நாகப்பட்டினம் மாவட்டம், நாகூரில் உள்ள உலகப் புகழ்பெற்ற 'நாகூர் ஆண்டவர் தர்கா'வின் 466ஆம் ஆண்டு 'கந்தூரி விழா' கொடியேற்றத்துடன் நேற்று (டிச.24) தொடங்கியது. பாரம்பரிய முறைப்படி தர்காவின் ஐந்து மினாராக்களிலும் ஏற்றப்படும் கொடிகள் நாகை மீரா பள்ளிவாசலுக்கு எடுத்து வரப்பட்டு "துவா" ஓதப்பட்டது.
பின்னர் அலங்கரிக்கப்பட்ட பெரிய ரதம், சின்ன ரதம், செட்டிப்பல்லக்கு, கப்பல் ரதம், சிங்கப்பூரில் இருந்து வரவழைக்கப்பட்ட கொடி உள்ளிட்ட அலங்கார வாகனங்களில், மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக நாகை, நாகூரின் முக்கிய வீதிகளில் வலம் வந்தது. ஆண்டவரின் பாடலை 'தாஹிரா இசை' உடன் இசைத்து வந்த இஸ்லாமியர்கள் கொடியினை வரவேற்றனர்.
இதனைத்தொடர்ந்து கொடிக்கு 'துவா' ஓதப்பட்டு வண்ணமிகு வாணவேடிக்கை வெடிக்க, நாகூர் ஆண்டவர் தர்காவிலுள்ள 5 மினாராக்களிலும் ஒரே நேரத்தில் கொடியேற்றப்பட்டது. இந்த கந்தூரி விழாவின் கொடியேற்ற நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் பங்கேற்று நாகூர் ஆண்டவரை பிரார்த்தனை செய்தனர். இதற்காக, நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜவகர் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுட்டிருந்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, வரும் ஜனவரி 2ஆம் தேதி இரவு 'தாபூத்து' என்னும் 'சந்தனக்கூடு ஊர்வலம்' நாகையில் இருந்து புறப்பட்டு, மறுநாள் ஜனவரி 3ஆம் தேதி அதிகாலை நாகூர் ஆண்டவருக்கு சந்தனம் பூசும் நிகழ்வு தர்காவில் நடைபெற உள்ளது. இந்த விழாவைக் காண தமிழ்நாடு மட்டுமில்லாமல் பிற மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நாகூருக்கு வருகை தந்துள்ளனர். மேலும், இந்த கந்தூரி விழாவை முன்னிட்டு, வரும் 3ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வீடியோ: ஆழ்கடலில் இருந்து வாழ்த்து தெரிவித்த கிறிஸ்துமஸ் தாத்தா