கேரள மாநிலம் கொச்சி துறைமுகத்தில் தங்கி நாகை மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வேளையில் இரண்டு விசைப்படகுகளில் நாகை மீனவர்கள் 25 பேர் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இந்நிலையில், கரோனா தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இச்சூழலில் மீன்பிடித்து விட்டு கரை திரும்பிய தமிழ்நாட்டு மீனவர்களை கொச்சி துறைமுகத்தில் உள்ளே நுழைய அம்மாநில அரசு அனுமதிக்கவில்லை. இதையடுத்து மீண்டும் கடலிலேயே நெடுந்தூரம் பயணம் செய்த நாகை மீனவர்கள், பாம்பன் அருகே நடுக்கடலில் நங்கூரமிட்டு தங்கியிருந்தனர். பின்னர் தமிழ்நாடு அரசுக்கு, மீனவர்கள் கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து, நேற்று பாம்பன் பாலம் திறக்கப்பட்டது.
கரோனாவை தடுக்க இதுதான் ஒரே வழி - ராகுல் தரும் ஐடியா
இதையடுத்து 23 நாட்களாக நடுக்கடலில் தவித்த நாகூர், சாமந்தான்பேட்டை, ஆரியநாட்டுதெரு, திருவனந்தபுரத்தைச் சேர்ந்த மீனவர்கள் இன்று நாகை துறைமுகம் வந்து சேர்ந்தனர். இதையடுத்து அவர்களை பரிசோதனை செய்த தமிழ்நாடு கடலோர பாதுகாப்புக் குழும காவல் துறையினரும், சுகாதாரத்துறை மருத்துவக் குழுவினரும் மீனவர்கள் 25 பேரையும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு 28 நாட்கள் மருத்துவ கண்காணிப்பில் கொண்டுவந்துள்ளனர்.