நாகை மாவட்டம் சங்கமங்கலம் ஊராட்சியில் உள்ள நீலியம்மன் கோயில் கிராமத்தில் பல ஆண்டுகளாக குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளின்றி கிராம மக்கள் தவித்துவருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக மேல்நிலை நீர்த்தேக்க தண்ணீர்த் தொட்டி ஒன்று கட்டப்பட்டது. ஆனால், தொட்டி கட்டப்பட்டு இத்தனை ஆண்டுகள் ஆன பின்னும், இது நாள்வரை அதனை பயன்பாட்டிற்கு அரசு கொண்டுவரவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதையடுத்து, தற்போது குடிநீர் பிரச்னை தலைவிரித்தாடும் சூழலில், அப்பகுதி கிராம மக்கள் குடிநீர் தேவைக்கு குளம், போர்வெல் கை பம்பு ஆகியவைகளை நம்பியே உள்ளனர். ஆனால், நிலத்தடி நீர்மட்டம் குறைந்த காரணத்தால் அங்குள்ள போர்வெல், கை பம்ப்களிலும் தற்போது குடிநீர் கிடைப்பதில்லை என்று கூறினர். தங்களின் குடிநீர் தேவைக்காக 3 கி.மீ. தூரம் சென்று குடிநீர் பிடித்துவருவதாக வேதனை தெரிவிக்கும் இப்பகுதி கூலி தொழிலாளர்கள், காலையில் கூலி வேலைக்கு சென்று, மீண்டும் கிராமத்திற்கு வரும் போது இரவு ஏழெட்டு மணிக்கு மேலாகிறது என்கின்றனர்.
மேலும், இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக கடந்த 2006ஆம் ஆண்டு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டு ஊராட்சி மூலம் குடிநீர் வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றது. ஆனால், கட்டிய நீர்த்தேக்கத் தொட்டி காட்சிப் பொருளாகவே இன்றுவரை இருந்து வருவகின்றது. தற்போது இந்த நீர்த்தேக்கத் தொட்டி பழுதாகி எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் பயனற்று இருக்கிறது.
அதனை சரி செய்து தங்களுக்கு தண்ணீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அது மட்டுமல்லாமல் அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக இப்பகுதி மக்கள் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு மலர் வளையம் வைத்து கண்ணீர் அஞ்சலி செலுத்தி ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.