மதுரை மாநகர் நெல்பேட்டை பகுதியில் மூன்று இளைஞர்கள் முகக்கவசம் அணியாமலும், 144 தடை உத்தரவை மீறியும் வெளியே சுற்றித் திரிந்துள்ளனர். அப்போது அந்தப் பகுதியில் ரோந்து பணி சென்ற விளக்குத்தூண் காவல் நிலைய காவலர்கள், அந்த இளைஞர்களை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அவர்கள் காவல்துறையினருக்கு முறையாக பதிலளிக்காமல் முன்னுக்குப் பின் முரணாக பேசியுள்ளனர்.
மேலும் அந்த இளைஞர்கள், சாத்தான்குளம் காவல் நிலைய இரட்டைக் கொலை சம்பவத்தை தொடர்புபடுத்தும் வகையிலும், ரோந்து பணியிலிருந்த காவலர்களிடம் அவதூறாக பேசியுள்ளனர். அவர்கள் பேசியதை சக காவலர் ஒருவர் வீடியோவாக எடுக்க முயன்றபோது, மூன்று பேரில் ஒருவர் காவலர் வைத்திருந்த செல்போனை தட்டிவிட்டு உடைத்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் விளக்குத்தூண் காவல் ஆய்வாளருக்கு தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த காவல் ஆய்வாளர், காவலர்களை இழிவாக பேசிய பிஸ்மில்லா கான், முகமது ஆரோன், சைபுல்லா கான் ஆகியோரை கைது செய்து, அவர்கள் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.