ETV Bharat / state

பாரம்பரிய அறிவாளிகளே 'மடையர்கள்' - உலக தண்ணீர் தினத்து நாயகர்கள் ஓர் பார்வை!

'மடையர்கள்' இல்லையேல் இந்த மண்ணும் நீர் நிலைகளும் இல்லை என்பதே உண்மை என்று எடுத்துக் கூறுகிறது, ஈடிவி பாரத் செய்திகளின் உலக தண்ணீர் தின சிறப்புத் தொகுப்பு....

யார் இந்த ‘மடையர்கள்’?.. பொதுப்பணித்துறை வேண்டாமா? - உலக தண்ணீர் தினம் சிறப்புத் தொகுப்பு!

author img

By

Published : Mar 21, 2023, 10:56 PM IST

Updated : Mar 22, 2023, 4:07 PM IST

'மடையர்கள்' யார்? - உலக தண்ணீர் தினத்து நாயகர்கள் ஓர் பார்வை!

மதுரை: நிலவியல்படி தமிழ்நாடு, மழை மறைவுப் பகுதியாகும். இங்கு வற்றாத ஜீவநதிகள் கிடையாது. ஆகையால் நமது முன்னோர்கள் மழைநீரை தேக்கி வைத்து, தேவைக்கு ஏற்றாற்போலப் பயன்படுத்தும் வகையில் ஏரி, கண்மாய், ஊருணி மற்றும் குளம் எனப் பல்வேறு வகையான நீர் நிலைகளை உருவாக்கினர். அவற்றைச் சிறப்பான முறையில் நிர்வகித்தனர். அவ்வாறு நீர் நிலைகளைப் பாதுகாப்பதற்கென்றே ஏரி வாரியம் அமைத்துள்ளனர்.

அந்த வாரியத்தின் மூலமாக நீர் நிலை மேலாளர்களை நியமித்தனர். அவர்களே பரம்பரை பரம்பரையாக அப்பணிகளை மேற்கொண்டு வந்தனர். இதனால், நீர் நிலைகள் குறித்த பாரம்பரிய அறிவு காலங்காலமாக அவர்களிடம் இருந்து வருகிறது. இதுதொடர்பாக தமிழர் வேளாண் மரபு குறித்த ஆய்வாளரும், பள்ளி ஆசிரியருமான முனைவர் ஏர் மகாராசன் ஈடிவி பாரத் செய்திகளுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், ''ஏரி நீரை ஒழுங்குபடுத்தி அதன் பாசனப் பரப்பின் அளவு, நீரின் தேவை மற்றும் ஏரியில் உள்ள நீரின் அளவு ஆகியவற்றை நன்கு அளந்து அறிந்து, நீர்ப் பகிர்மானத்தை முறைப்படுத்துபவர்கள் ‘நீர்க்கட்டிகள்’ என அழைக்கப்பட்டனர்.

munaivar air maharajan
முனைவர் ஏர் மகாராசன்

நீர் வகையறாக்களின் வரலாறு: ஏரி நீரும், வாய்க்கால்களும் ஏரி வாரியத்தால் கண்காணிக்கப்பட்டன. ஏரி வாரியம், ஊரவையின் ஆளுகைக்கு உட்பட்டதாகும். கரைகளில் மரங்கள் வளர்க்கப்பட்டன. ஏரியில் மீன்கள் வளர்க்கப்பட்டன. இவற்றில் இருந்து வரும் ஏலத்தொகை ஏரிப் பராமரிப்புக்கான வருவாயாக மாறியது. இத்தகைய நீர் மேலாண்மையைத் திறம்பட மேற்கொண்டிருந்த நீர் சமூகம், பல பெயர்களால் குறிக்கப்பட்டிருக்கிறது. ஆற்று நீரை அடுத்தடுத்த ஏரி எனும் நீர்நிலைகளுக்குக் கொண்டு வந்து சேர்த்து, பங்கிட்டுக் கொடுக்கும் பொறுப்பை செய்தவர்கள் ‘நீராணிக்கர்கள்’ என அழைக்கப்பட்டுள்ளனர்.

ஆற்றில் இருந்து நீரைக் கொண்டு வந்து சேர்த்து, அந்த நீரைக் கட்டி வைத்துக் காத்ததால் அவர்களுக்கு ‘நீர்க்கட்டியார்’ என்று பெயர். இவர்கள்தான் அந்த ஏரிக்கான முழுப்பொறுப்பும் கொண்டவர்கள். ஆற்றிலிருந்து கால்வாய்களை உருவாக்கியும், மேலாண்மையும் செய்து வந்தவர்கள் ‘ஆற்றுக் காலாடியார்’ எனவும் அழைக்கப்பட்டுள்ளனர்.

ஏரியில் மீன் பிடிப்பது, பரிசல் இயக்குவது, நீர் குறைவாக உள்ள கோடைக் காலங்களில் ஏரி நிலத்தில் தற்காலிகமாகப் பயிர் செய்வது என, ஏரி நிலைக்குள் நடந்த எந்தவொரு நிகழ்வும் நீர்க்கட்டியாரின் அனுமதி இருந்தாக வேண்டும்.

ஏரி நீரின் பாதுகாப்பு, அதன் கரையில்தான் இருக்கிறது. அந்தக் கரை உடைப்பு எடுத்தால் அது தானும் அழிந்து, ஏரிப் பாசனம் பெறும் வயல்வெளிகளையும், மக்கள் வாழிடங்களையும் அழித்து விடும். ஆகையால்தான், ஏரியின் கரை மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. அத்தகைய ஏரியின் கரையை எப்போதும் வலுவாக வைத்திருக்க வேண்டும். நீர் ஆதார அமைப்புகளின் கரை வேலைகளைப் பார்த்ததால் ‘கரையார்’ என்று அழைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள்தான் ஏரிக்கரைக்கு முழுப்பொறுப்பும் ஆவர். கார் எனில், மழை எனும் பொருளை குறிக்கும். எனவே, மழை நீரைத் தேக்கி நிர்வகிக்கும் ஆளுமை கொண்டதால், கார் + ஆளர் = காராளர் எனவும் அழைக்கப்பட்டுள்ளனர். ஒரு சமூகத்தின் பொருளாதார வளம் வேளாண்மையோடு தொடர்புடையது. ஏரிகள் வேளாண் பாசனத்திற்காகவே உருவாக்கப்பட்டவை. எதிரிகளால் வேளாண் பொருளாதாரச் சீர்குலைவுகள் நடந்திருக்க வாய்ப்புண்டு.

எதிரிகளிடமிருந்து ஏரிகளையும், இதர நீர்நிலைகளையும் காத்த காரணத்தால் ‘குளத்துக் காப்பாளர்கள்’ எனவும் அழைக்கப்பட்டு வந்துள்ளனர். நீர் நிலைகளுக்குள் தேவையின்றி வளர்ந்த செடி,கொடிகள், பாசிகள் போன்றவற்றை அழித்து தூய்மைப்படுத்தி, வயல் பள்ளங்களில் வேளாண்மைக்கு நீர் திறந்து விட்டதனால் ‘குளத்துப் பள்ளர்கள்’ என அழைக்கப்பட்டுள்ளனர். ஏரியில் இருந்து திறந்து விடும் நீரை வாய்க்கால் வெட்டிக் கொண்டு வந்தமையால் ‘நீர் வெட்டியார்’ எனவும், நீரை வயல்கள் வரை கொண்டு வந்து பாய்ச்சியதால் ‘நீர்ப் பாய்ச்சியார்’ எனவும் அழைக்கப்பட்டுள்ளனர். இவர்கள்தான் வயல்களுக்கான நீரைக் கண்காணித்தவர்கள்.

நீர் ஆதார அமைப்புகளிலிருந்து நீரைத் திறந்து விடுவதற்காக அவற்றில் மதகு, மடை, குமிழி மற்றும் தூம்பு போன்ற அமைப்புகள் இருக்கும். வேளாண் பாசனத்திற்காக இந்த மடைகளைத் திறந்து விடுவதால் ‘மடையர்கள்’ எனவும் ‘மடைக் குடும்பர்கள்’ என்றும் அழைக்கப்பட்டுள்ளனர். நீர் நிலைகளிலிருந்து நீரை வெளியேற்றுவதில் மதகுகளுக்கும், மடைகளுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. மதகுகள் வழியாக வேண்டிய அளவு நீரை வெளியேற்ற முடியும். நீரைக் கட்டுப்படுத்தவும் முடியும்.

சுதந்திர இந்தியாவில் எதற்காக பொதுப்பணித்துறை? ஆனால், மடை என்பது அப்படியல்ல. மடையைத் திறந்து விட்டால், முழு அளவில் நீர் பீறிட்டுக் கொண்டு வெளியேறும். அதைக் கட்டுப்படுத்தவும் முடியாது. மடைகள் அமைக்கப்பட்ட நீர் நிலைகளில் மடைகளைக் கையாண்டவர்கள் தான் ‘மடையர்கள்’ என அழைக்கப்பட்டுள்ளனர். ஏரி உள்ளிட்ட நீர் நிலைகளுக்கு வருகின்ற மழைநீர் வெறும் நீரை மட்டும் கொண்டு வருவதில்லை. கூடவே, வண்டல் மண்ணையும், சேறும், சகதிகளையும் சேர்த்தே கொண்டு வரும்.

இவை அதிகம் சேர்ந்தால் நீர்நிலைகள் தூர்ந்து போகும் வாய்ப்புண்டு. இதனால் மடைகளும், மதகுகளும் அடைத்துக் கொள்ளும். இந்த வண்டல் மண்ணையும், சேறையும் ஏரியில் இருந்து வெளியேற்ற ‘குமிழி’ எனும் ஒரு நுட்பத்தை வைத்திருந்தார்கள். ஏரி நீரை வெளியேற்றும் ஓர் அமைப்புதான், அது. குமிழியானது, ஏரியின் தரைத் தளத்தில் மதகுகளில் இருந்து சற்றேறக் குறைய 300 அடி தொலைவில் ஏரியின் உட்புறமாக அமைக்கப்பட்டிருக்கும்.

ஏரியில் அதிகமான வண்டலும், சகதியும் சேரும்போதுதான் இந்தக் குமிழியைத் திறந்து விடுவர். அது வெளியேறி ஏரிக்கு வெளியே உள்ள பாசனக் கால்வாயில் சேர்ந்து விடும். இதனால் ஏரியின் தளத்தில் சேர்ந்த வண்டல் மண் வெளியேற்றப்படுவதால், அதன் பாசனப் பயிர்களுக்கும் நல்ல உரம் கிடைத்து விடுகிறது.

நீர்நிலைகளில் பயன்படுத்திய தூர்வாரும் நுட்பம்தான் இது. நீர் நிலைகளில் குமிழிகள் அமைத்துத் தூர்வாரி, வயல் பள்ளங்களில் நீர் பகிர்ந்ததால் ‘குமிழிப் பள்ளர்கள்’ எனவும் அவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். ஆனால், ஆங்கிலேயர்களின் வருகைக்குப் பின்னர், நீர் நிலைகள் அனைத்தும் பொதுப்பணித்துறை எனும் அரசு நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு, மேலாண்மை செய்யப்பட்டது. அதுவரை மக்கள் சொத்தாக இருந்த நீர் நிலைகள், அவர்களிடமிருந்து அந்நியப்படத் தொடங்கியது.

அந்த நிலை விடுதலை பெற்ற இந்தியாவிலும் தொடர்ந்து நீடித்ததால், தற்போது நீர்நிலைகளின் மீது பொதுப்பணித்துறை அதிகாரிகளே ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

இதனால், பல்வேறு வகையிலும் நீர்நிலைகள் ஆக்கிரமிப்புக்கு ஆளாகி, லட்சக்கணக்கில் இருந்த நீர்நிலைகள் அனைத்தும், இன்று 70 ஆயிரத்திற்கும் குறைவாக சுருங்கியதோடு, அவற்றுள்ளும் பெரும்பாலானவை தூர்ந்து போய்விட்டன. ஊழல் மலிந்த ஒரு துறையாக தமிழ்நாடு பொதுப்பணித்துறை உருவெடுத்துவிட்ட காரணத்தால், நீர்நிலைகள் மிகக் கடுமையான சேதாரத்திற்கு உள்ளாகி உள்ளன” என்றார்.

எங்களது தொழிலில் உயிரிழப்புகளும் உண்டு: மதுரை மாவட்டம், கூத்தியார்குண்டு கிராமத்தைச் சேர்ந்த மடைகாரர் மகாலிங்கம் கூறுகையில், “நாங்கள் ஆதி காலத்திலிருந்து நிலையூர் கண்மாயின் மடைகாரர்களாகப் பணி செய்து வருகிறோம். எனக்கு விவரம் தெரிந்து நான் 6-வது தலைமுறை. ஆனால், அண்மைக்காலமாக எங்களுக்கும் எங்களின் பணி நிமித்தமும் அங்கீகாரமற்றவர்களாக இருக்கிறோம்'’ எனக் கூறினார். மேலும் அதே ஊரைச் சேர்ந்த மற்றொரு மடைகாரர் அழகர்சாமி கூறுகையில், “பாப்பு, ராமன், சோணை ஆகிய எங்களது தந்தைமார்களே இந்தப் பணியைச் செய்தனர்.

அவர்களுக்குப் பிறகு மகாலிங்கம், அழகர்சாமி, வேல்முருகன் ஆகியோர் பார்த்து வருகிறோம். கண்மாய்க்குள் நீந்திச் சென்று மடையை நிர்வாகம் செய்வது மிகக் கடினமான வேலையாகும். கல், மண், முட்செடிகளை அகற்றி மடைகளைப் பராமரிப்பதே எங்களது பணி. கரையிலிருந்து 25 மீட்டர் முதல் 80 மீட்டர் தூரத்தில் உள்ளுக்குள் தவழ்ந்து, நீந்திச் சென்று சீரமைப்புச் செய்வது சவால் மிகுந்தது. மூச்சுத் திணறும். இதுபோன்ற சமயங்களில் உயிரிழந்தவர்களும் உண்டு.

இந்தப் பணியை வேறு எவரும் செய்ய முடியாது. எங்களது கிராம நிர்வாகம் மூலமாக இந்தக் கண்மாய் நிர்வகிக்கப்பட்டபோது சிறப்பாக இருந்தது. ஆனால், பொதுப்பணித்துறையிடம் சென்ற பிறகு, சிறு சிறு பராமரிப்புகளுக்கும்கூட அவர்களையே சார்ந்திருக்க வேண்டிய நிலை' என்றார்.

இதனைத் தொடர்ந்து கூத்தியார்குண்டு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மகாராஜன் கூறுகையில், “குறைந்தபட்சம் இந்த கண்மாய் மூலமாக 1,500 ஏக்கர் நிலங்கள் பயன்பெறுகின்றன. எங்கள் ஊர் விவசாயிகள் கோரிக்கை வைத்தால், மடைகாரர்கள் முன்னிலையில்தான் தண்ணீர் திறக்கப்பட்டு கொண்டு செல்லப்படும் வழக்கம், காலங்காலமாக இருந்து வந்தது. தற்போதும் அவ்வாறு இருந்தாலும், கண்மாய்க்கான முழு அதிகாரமும் பொதுப்பணித்துறையிடமே இருப்பது வேதனைக்குரியது. பெரிய மடையில் உள்ள ஷட்டர் கம்பிகள் வளைந்து விட்டதால், தற்போது மடைக்குக் கீழே மணல் மூட்டை கொண்டு அடைத்து, தண்ணீர் வெளியேற்றத்தை மட்டுப்படுத்தியுள்ளோம்.

இதனை சரி செய்வதற்கு கடந்த பல மாதங்களாக அதிகாரிகளிடம் முறையிட்டும்கூட இன்னும் அவர்கள் வரவில்லை. ஒரு மழை பெய்தாலும்போதும், கண்மாய் கரைகளில் உடைப்பு ஏற்பட்டு விடுகிறது. இதனை சரி செய்வதற்கும் அவர்கள் வருவதேயில்லை. ஆனால், அப்படியே வந்தாலும்கூட அந்தப் பணியை எங்கள் கிராமத்து விவசாயிகளே மேற்கொள்வார்கள். இவர்கள் வேடிக்கைப் பார்த்து விட்டு சென்றுவிடுவார்கள்.

அதுபோன்ற பணியின்போது, இரண்டு விவசாயிகள் உள்ளே விழுந்தனர். அவர்களை நாங்கள் காப்பாற்றினோம். கண்மாயைச் சீரமைக்க கடந்த 9 ஆண்டுகளாக நாங்களும் கோரிக்கை விடுத்து வருகிறோம். கண்மாய் பயனாளிகளாக இருக்கும் விவசாயிகளே இதுபோன்ற பணிகளை ஒருங்கிணைந்து மேற்கொள்ள முடியும் என்றாலும், பொதுப்பணித்துறை அதிகாரிகளின் ஒப்புதல் மிகுந்த அவசியமாக உள்ளது. ஆகையால் பல நேரங்களில் சின்னச் சின்ன பணிகளைக் கூட மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது'' எனத் தெரிவித்தார்.

தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை: மேலும் அதே கிராமத்தைச் சேர்ந்த வடிவேலன் என்ற இளைஞர் கூறுகையில், ''இந்த கண்மாயின் பரப்பளவு சுமார் 700 ஏக்கருக்கும் மேலாகும். ஆனால், தற்போது வெகுவாக சுருங்கி 352 ஏக்கர் பரப்பளவாகி உள்ளது. காரணம், பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்று வரும் ஆக்கிரமிப்பு. கிராமத்தின் கட்டுப்பாட்டில் இருக்கின்ற வரை, இதுபோன்ற அவல நிலை இல்லை. தங்களுக்கான தேவை என்ன என்பது விவசாயிகளுக்குத் தெரியும். அதை சம்பந்தமே இல்லாத வேறொருவர் முடிவு செய்ய முடியாது.

கண்மாயில் மேற்கொள்ளப்படும் மராமத்துப் பணிகளை விவசாயிகள் செய்தாலும், பொதுப்பணித்துறை செய்ததாக கணக்கு காட்டப்படுவதுதான் மிகுந்த வேதனையளிக்கிறது. பாரம்பரியமான நீர் மேலாண்மையின் பொருட்டு இதனை கிராமத்தின் நிர்வாகத்திற்குள் கொண்டு வர வேண்டும். மடைகாரர்கள் மூலமாக கண்மாய்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால், நமது உழவுத் தொழிலே அற்றுப் போய்விடும் நிலை உருவாகும்'' என்றார்.

மேலும் இது தொடர்பாக நிலையூர் நீர்ப்பாசன சங்கத் தலைவர் ரமேஷ் கூறுகையில், “நீர்நிலைகளின் பாரம்பரியத்தை மீட்க வேண்டுமானால், மடைகாரர்கள் கௌரவிக்கப்பட வேண்டும். நீர்ப்பாசன சங்கத்தின் தலைவராக நான் இருந்தபோதிலும், மடைகாரர்கள் மூலமாகவே மடை திறப்பதை உறுதி செய்கிறேன். சங்கத்திற்கான ஆட்களைத் தேர்ந்தெடுக்க தேர்தல் முறையெல்லாம் தற்போது உள்ளன.

ஆனால், பழங்காலந்தொட்டு பரம்பரை பரம்பரையாக தோட்டி மடையர்கள் என்ற முறை உருவாக்கப்பட்டு, கண்மாய்கள் நிர்வாகம் செய்யப்பட்டன. இதனைக் கருத்தில் கொண்டு மடைகாரர்களுக்கு உரிய மரியாதையை தமிழ்நாடு அரசு செய்வதோடு, நிரந்தர வேலைவாய்ப்புக்கும் வழி ஏற்படுத்தித் தர வேண்டும்'' எனக் கூறினார்.

தொடர்ந்து மாடக்குளம் கண்மாய் மடைகாரர் குடும்பத்தைச் சேர்ந்த சுபா பிச்சை கூறுகையில், ''உணவளிக்கும் உழவுத் தொழில்தான் உலகத்திலேயே மிகச் சிறந்தது. அந்தக் குடியில் பிறந்தேன் என்பதற்காக நான் மிகவும் பெருமை கொள்கிறேன். மதுரை மாநகரின் நீர் ஆதாரத்திற்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தது, மாடக்குளம் கண்மாய். இதில் வடக்கு, நடு மற்றும் தெற்கு என மூன்று மடைகள் உள்ளன.

இதனை ஆள்வதற்கு நம் மூதாதையர்கள் மடைக்குடும்பர் முறையை ஏற்படுத்தி, பாதுகாத்து வந்துள்ளனர். இந்த கண்மாயிலுள்ள நீரைக் கட்டுப்படுத்தும் பெரும் பணியை அவர்கள் மேற்கொண்டனர். இருக்கின்ற தண்ணீரை முறைப்படுத்தி வேளாண்மைக்கும், குடிமைத்தேவைகளுக்கும் பயன்படுத்துகின்ற அறிவும், ஆற்றலும் நிரம்பியவர்கள் குடும்பர்களே. இதற்காக பல ஆண்டுகளுக்கு முன்பு மடையர் மானியம் கூட வழங்கப்பட்ட வரலாறு உண்டு.

ஆனால், அம்மானிய முறையெல்லாம் இன்று என்ன ஆனது என்பது கேள்விக்குறிதான். அவர்களுக்கான அங்கீகாரம் இல்லாததால், அவர்கள் வெவ்வேறுப் பணிகளுக்குச் சென்று விட்டனர். இதனால் நாம் நீர் நிலைகளையே இழக்க வேண்டியதாகி விட்டது. ஆகையால், அவர்களையெல்லாம் கணக்கெடுத்து, மீண்டும் நீர் மேலாண்மைப் பணிகளில் ஈடுபடுத்தி, அவர்களின் பாரம்பரிய அறிவைப் பயன்படுத்தும் வகையில், அவர்களின் வேலையை அரசுப் பணியாக தமிழ்நாடு அரசு அங்கீகரிக்க வேண்டும்'' என்றார்.

இதனையடுத்து பேசிய நீரியல் அறிஞர் முனைவர் சீனிவாசன், ''இந்தியாவில் அதிலும், குறிப்பாக தென்னிந்தியப் பகுதிகளில் ஆசிய நிலமானிய முறை என்ற நில ஒழுங்குமுறை பிரிட்டிஷார் காலத்தில் அறிமுகமானது. உழுபவர்களுக்கு நிலம். அவை சொந்தமாக இல்லாவிட்டாலும், அதில் நிரந்தரமாக உழுவதற்கான முறை உருவானது.

இதில் சாதி இல்லை: அரசு நிறுவனங்களாகக் கருதப்படுகின்ற கோயில், நிலம், பள்ளிகள் ஆகியவற்றில் பணி செய்பவர்களுக்கான மானியங்கள், குளங்கள், கண்மாய்கள், ஏரிகள், மடைகள் ஆகியவற்றைப் பராமரிப்பதற்காக வழங்கப்பட்ட மானியங்கள் என மூன்று வகையாக உள்ளன. இந்த மானிய முறை பல நூறு ஆண்டுகளாக தொடர்ந்து இருந்து வருகிறது. ஆங்கிலேயர்கள் வந்ததற்குப் பிறகு, அவற்றை முறைப்படுத்தி, எழுத்துப்பூர்வ ஆவணமாக்கினார்கள்.

அந்த வகையில், தற்போதுள்ள கண்மாய், ஏரி, குளங்கள் உள்ளிட்ட பொது நீர்நிலைகளில் மடை திறப்பு, அடைப்பு, கால்வாய்கள் நிர்வாகம் ஆகிவற்றைச் செய்வதற்கு மடைக்குடும்பர், மடைகாரர், மடையர் என்று அழைக்கப்படுவோடுக்கு மானியங்கள் வழங்கப்பட்டன. இந்த மானியங்கள் பொதுவாக நிலங்களை வழங்குவது அல்லது விளைச்சலில் ஒரு குறிப்பிட்ட பங்கினை வழங்குவது என முறைப்படுத்தப்பட்டன. நிலங்களை மானியமாக வழங்கியிருப்பது எழுத்து ஆவணமாக இன்றைக்கும் உள்ளன.

காலப்போக்கில் இந்த மானிய நிலங்கள், குடும்பங்களின் பெருக்கம் காரணமாக துண்டு துண்டாக மாறின அல்லது வேறொரு நபரின் கைகளுக்கு மாறின. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு தென்னிந்தியப் பகுதிகளில் உள்ள கண்மாய்கள், குறிப்பாக சித்தூர், மதுரை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள கண்மாய்களில் மடை வேலை பார்க்கக் கூடிய குடும்பத்தினர் குறித்து ஆய்வு மேற்கொண்டோம். அவர்கள் குறிப்பாக இரண்டு அல்லது மூன்று குடும்பத்தினர் மட்டுமே அப்பாரம்பரியத்தில் இருப்பதை நாங்கள் அறிந்தோம். சில கிராமங்களில் அக்குறிப்பிட்ட பரம்பரையினர் இல்லாத வேறு சாதியர் இருப்பதையும் கண்டறிந்தோம்.

இது ஒரு தொழில் என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டுமே தவிர, சாதிக்கானது இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். குறைந்தது ஆறு, ஏழு சாதியினர் இந்த மடைத்தொழிலில் ஈடுபட்டிருந்ததை அறிய முடிந்தது. அப்பணியில் ஈடுபட்டிருக்கும் நபர், அக்கண்மாய் சார்ந்த நிலத்தைக் கொண்டுள்ள நடுத்தர விவசாயியாக இருந்தார். குறிப்பாக, மதுரை, ராமநாதபுரம் போன்ற பகுதிகளில் சுமார் ஒரு ஏக்கர் நிலத்தைக் கொண்டவராக அல்லது அதற்கு ஈடான பொருள் மதிப்பை நெல்லாகப் பெறுகின்றவர்களாக அவர்கள் இருக்கின்றனர்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: "தரிசு நிலங்களை விவசாய நிலங்களாக மாற்ற நடவடிக்கை" - வேளாண்துறை செயலாளர்!

Last Updated : Mar 22, 2023, 4:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.