மதுரை: உலகப் புகழ்பெற்ற மதுரை ஜல்லிக்கட்டு வருகின்ற ஜனவரி 15ஆம் தேதி அவனியாபுரத்திலும் 16ஆம் தேதி பாலமேட்டிலும் 17ஆம் தேதி அலங்காநல்லூரிலும் நடைபெற உள்ள நிலையில், ஜல்லிக்கட்டு பணிகளை மதுரை பாலமேடு பேரூராட்சி நிர்வாகம் மற்றும் பாலமேடு பொது மகாலிங்க மடத்துக் கமிட்டியினர் இணைந்து பாலமேட்டில் வெகு சிறப்புடன் நடத்த உள்ளனர்.
பாலமேடு ஜல்லிக்கட்டு நடைபெறும் வாடிவாசல் முன் இன்று சிறப்பு பூஜையுடன் பணிகள் தொடங்கின. பின்னர் வாடிவாசல் முன் உள்ள மஞ்சமலை ஆற்று மைதானத்தைத் தூய்மைப்படுத்தும் பணி தொடங்கியது. பார்வையாளர்கள் அமரும் கேலரி, உள்ளிட்ட பல்வேறு வகையான பணிகளை ஜல்லிக்கட்டு விழாக் குழுவினர் மேற்கொள்ள உள்ளனர்.
இந்தாண்டு நடைபெறும் பாலமேடு ஜல்லிக்கட்டில் முதல் பரிசாக கார், இருசக்கர வாகனம், எல்.இ.டி.டி.வி, தங்கக்காசு, வெள்ளிக்காசு, சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு வகையான பரிசு பொருட்கள் வழங்கப்பட உள்ளன. பாலமேடு ஜல்லிக்கட்டில் சுமார் 700 காளைகளும், 400 வீரர்களும் கலந்து கொள்ள உள்ளனர். மாடுபிடி வீரர்களும், காளைகளும் சென்ற ஆண்டை போல் ஆன்லைன் முறையில் தங்களுக்கான டோக்கன்களை பெற்றுக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: படியேறி பெருமாளை தரிசித்த பட்டியலின மக்கள் - வைகுண்ட ஏகாதசியில் கிட்டிய விமோசனம்