கொரோனோ வைரஸ் காரணமாக ஜப்பான் நாட்டின் யோகஹாமா துறைமுகத்தில் 3700 பயணிகளுடன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கப்பலில் இந்தியர்கள் 162 பேர் உள்ளனர். அவர்களில் ஐந்து பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். கப்பலில் கண்காணிப்பாளராக பணியாற்றும் அன்பழகன், தங்களை உடனடியாக இந்திய அரசு மீட்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்நிலையில் இது குறித்து மதுரை கரடிப்பட்டியிலுள்ள அவரது மனைவி மல்லிகா ஈடிவி பாரத்திற்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில், “எனது கணவர் பணியாற்றும் டயமண்ட் பிரின்சஸ் கப்பல் நிர்வாகம் தற்போது மூன்று மாத ஊதியத்துடன் 10 நாள்களில் விடுவிப்பதாக அறிவிப்புச் செய்துள்ளது.
ஏற்கனவே ஒரு வாரம் ஆகி விட்ட நிலையில் அக்கப்பலில் உள்ள அவர்களுக்கு கொரோனோ வைரஸ் பரவி 100க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பத்து நாள்கள் அவர் அங்கே இருக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. ஆகையால் இந்திய அரசு உடனடியாக தலையிட்டு என் கணவர் உள்ளிட்ட ஐந்து தமிழர்களையும் மொத்தமுள்ள 162 இந்தியர்களையும் உடனடியாக மீட்டுக் கொண்டுவர வேண்டும். இதற்கு தமிழ்நாடு அரசு மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
இதையும் படிங்க...கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு - சாட்சி விசாரணை தொடங்கியது