மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு சித்ராபவுர்ணமியான ஏப்.16 ஆம் தேதி அதிகாலை நடைபெற்றது. இந்த நிகழ்வைக் காண மதுரை, சுற்றுவட்டார ஊர்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்.
கரோனா கட்டுபாடுகள் தளர்வுகளுக்குப் பின் பக்தர்கள் பங்கேற்று நிகழ்வு நடைபெற்றதால் அங்கு கூட்டநெரிசல் ஏற்பட்டது. அப்போது நெரிசலில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக மதுரை தல்லாகுளத்தில் மண்டகப்படிதாரர்கள் நேற்று (ஏப்ரல்.18) செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது , "பாரம்பரியமாகவும், மரியாதை நிமித்தமாகவும் கள்ளழகர் எழுந்தருள மண்டகப்படிகளை அமைத்து வருகின்றோம். தல்லாகுளம் பெருமாள் கோயிலைச் சுற்றியுள்ள 69 மண்டகப்படிகளில் திட்டமிட்டு கோயில் நிர்வாகம் கள்ளழகரை நிறுத்தாமல் சென்றுள்ளனர். தலா ஒரு மண்டகப்படிக்கு 3 சேவையாக 9,800 ரூபாய்க்கு ரசீது கொடுத்துள்ள நிலையில், கூடுதலாகவும் அதிகாரிகள் பணம் வசூல் செய்தனர். இருந்தபோதிலும் மண்டகப்படிகளில் சாமி நிற்கவில்லை. மேலும் சீர்பாதம் சுமப்பவர்களும் பணம் கேட்டு மிரட்டினர்.
அவர்களும் மண்டகப்படிகளில் நிற்காமல் தூக்கிச் செல்கின்றனர். கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்ச்சியில் காவல்துறையினர் முறையாகப் பாதுகாப்பு வழங்கவில்லை. இதுகுறித்து கோயில் நிர்வாகம் எந்த வித விளக்கமும் அளிக்கவில்லை. இதுகுறித்து நீதிமன்றத்தை நாட உள்ளோம். மண்டகப்படிகளில் நிறுத்தாமல் சென்றதுதான் கூட்ட நெரிசலுக்குக் காரணம்" என குற்றம்சாட்டினர்.