மதுரையில் இருந்து சென்னைக்கு பகல் நேரங்களில் செல்லும் பயணிகளின் வசதிக்காக 1977ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் நாள் தொடங்கப்பட்டது வைகை எக்ஸ்பிரஸ். மதுரை மண்டலத்தின் முதல் சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸாச வைகை, மதுரையில் இருந்து நாள்தோறும் காலை 7.00 மணிக்கு மற்றும் சென்னையிலிருந்து மதியம் 1.40க்கும் புறப்படும் .
நாள்தோறும் இந்த ரயிலில் சென்னை-மதுரை, மதுரை-சென்னை மார்க்கமாக 7 ஆயிரம் பேர் பயணம் செய்கின்றனர். ஒரு வழிப் பயண தூரம் என்று பார்த்தால் 497 கி.மீ. என, ஆண்டிற்கு 3 லட்சத்து 65 ஆயிரம் கி.மீ. தூரம் பயணம் செய்கிறது. இந்த 42 ஆண்டுகளில் தோராயமாக 1 கோடியே 50 லட்சம் கி.மீ. தூரம் பயணம் செய்து சாதனை படைத்துள்ளது (பூமியிலிருந்து நிலவின் தூரம் 4 இலட்சம் கி.மீ.!!!).
இந்தியாவிலேயே முதல் முறையாக மீட்டர்கேஜ்-ல் குளிர்சாதன வசதி அறிமுகப்படுத்தப்பட்டது வைகை எக்ஸ்பிரஸ். மேலும், ஆசியாவிலேயே மீட்டர் கேஜ்-ல் மிக வேகமாகச் சென்ற முதல் ரயில் ஆகும்.
இது தொடர்பாக ஓய்வுபெற்ற என்ஜின் டிரைவர் பால் டேவிட்சன் கூறுகையில், கடந்த 1977ஆம் ஆண்டில் இருந்து வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் ஓட்டுனராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளேன். அப்போது இது நீராவி என்ஜின். மிக கடினமாக இருக்கும். அந்த காலக்கட்டத்தில் தண்டவாளத்தின் இரு புறமும் நின்று மக்கள் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலை வேடிக்கை பார்ப்பார்கள் என்றார்.
மற்றொரு ஓய்வு பெற்ற என்ஜின் டிரைவர் அய்யலு பேசுகையில், இன்றைக்குப் பல்வேறு நவீன வசதிகளோடு வைகை எக்ஸ்பிரஸ், மதுரைக்கும் சென்னைக்கும் பயணம் செய்து கொண்டிருக்கிறது. அதேபோன்று இந்த ரயிலை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது, என்றார்.
முன்னதாக, வைகை எக்ஸ்பிரஸ் ரயிலின் 42ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ஆர்வலர்கள் கேக் வெட்டி கொண்டாடினர். மேலும், ஓய்வுபெற்ற என்ஜின் டிரைவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.