மதுரை: தமிழ்நாட்டில் விடுபட்ட ஒன்பது மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்து சில தினங்களே ஆன நிலையில் நகர்ப்புற தேர்தல் நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் மாநில தலைமை தேர்தல் ஆணையம் ஈடுபட்டுவருகிறது.
இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிகள் தொடர்பாக மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் ஆகிய 6 மாவட்ட அலுவலர்களுடன் மண்டல ஆய்வுக்கூட்டம் மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் தலைமையில் மதுரையில் நேற்று (அக்.26) நடைபெற்றது.
மதுரை மடீட்சியா அரங்கில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு தேர்தல் பயிற்சி மற்றும் ஆயத்த பணிகள் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.
இக்கூட்டத்தில் பேசிய மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார், "உச்சநீதிமன்றம் 4 மாத கால அவகாசம் அளித்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்தும் நிலை உள்ளது. நேரம் குறைவு மற்றும் தேர்தலை நடத்துவதில் சவால்கள் உள்ளதால் சிரமத்தை பார்க்காமல் தேர்தலை சிறப்பாக நடத்த உதவ வேண்டும். சுதந்திரமாகவும், நேர்மையாகவும் தேர்தலை நடத்த அலுவலர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
ஒலிம்பிக் போட்டியில் ஓடுவது போல
நவம்பர் -15ஆம் தேதிக்குள் வாக்கு இயந்திரங்களை தயார் நிலையில் வைக்க வேண்டும். நவம்பர் 1ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். ஒலிம்பிக் போட்டியில் ஓடுவது போல நகர்புற உள்ளாட்சி தேர்தல் பணியை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும்" எனக் கூறினார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிகள்: மாவட்ட ஆட்சியர்களுடன் தேர்தல் ஆணையர் ஆலோசனை