சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்றுவரும் அகழாய்வுப் பணிகளில் கண்டறியப்பட்ட தொல்லியல் பொருள்களின் காலத்தைக் கண்டறிய தமிழ்நாடு தொல்லியல் துறையோடு மதுரை காமராஜர் பல்கலைக்கழக உயிரியல், நுண்ணுயிரியல் துறை சார்பில் மரபணு ஆய்வகம் அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது.
இதையடுத்து ஆய்வுகளை மேற்கொள்ள நவீன மரபணுவியல் ஆய்வுக்கூடம் அமைக்க மாநில அரசு, பல்கலைக்கழக மானியக்குழுவிடம் நிதி, அனுமதி கோரப்பட்டிருந்தது. இந்நிலையில், பல்கலைக்கழகத்தில் மரபணுவியல் ஆய்வுக்கூடத்துக்கு மாநில தொல்லியல் துறை, பல்கலைக்கழக மானியக்குழு ஆகியவற்றின் சார்பில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
ஆய்வுக்கூடத்துக்கு மாநில தொல்லியல் துறையும் பல்கலைக்கழக மானியக்குழுவும் சேர்ந்து ரூ.3 கோடி ஒதுக்குவதாக அறிவித்துள்ளன. ஆய்வுக்கூடம் அமைப்பது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் இன்று (செப். 30) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர் மு. கிருஷ்ணன், தொல்லியல் அறிஞர் கா. ராஜன், உயிரியல் விஞ்ஞானி நீரஜ் ராய், மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன், தொல்லியல் துறை துணை இயக்குநர் சிவானந்தம் ஆகியோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் கீழடி தொல்லியல் பொருள்கள் ஆய்வு குறித்தும் ஆய்வுக்கூடம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இதையும் படிங்க: மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் முதுகலை நுண்ணுயிர் மருத்துவ படிப்பு