மதுரை மாவட்டம் விரகனூர் பகுதியை சேர்ந்த நாகராஜன், மணிகண்டன் ஆகிய இருவரும், நேற்றிரவு பணி முடித்துவிட்டு பாண்டி கோவில் ரிங் ரோடு பகுதியில் பைக்கில் வந்துக்கொண்டிருந்தனர்.
அப்பகுதியில் தேசிய நெடுஞ்சாலை துறை சார்பாக உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால், ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டுள்ளது.
இந்த ஒரு வழிப்பாதையில் எதிர்திசையில் இவர்கள் வந்ததாக கூறப்படுகிறது. இதனை கவனிக்காத சரக்கு வாகனம் ஒன்று இருசக்கர வாகன மீது மோதி விபத்துக்குளானது.
இந்த விபத்தில் மணிகண்டன் , நாகராஜன் இருவரும் தலை நசுங்கி சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தல்லாகுளம் போக்குவரத்து புலனாய்வு காவல்துறையினர், இருவரின் உடலையும் மீட்டு உடற்கூராய்வுக்கு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர். உயர்மட்ட பாலம் அமைக்கும் பணியின் காரணமாக அப்பகுதியில் சாலையை முறையாக ஒழுங்குபடுத்த தவறியதால், கடந்த 10 நாள்களில் நடந்த ஐந்துக்கும் மேற்பட்ட விபத்துகளில் சுமார் 3 பேர் உயிரிழந்துள்ளனர். ஐந்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.