மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள முள்ளிப்பள்ளம் பகுதி மயானத் திடலில் இளைஞர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடப்பதாகக் காடுபட்டி காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் முள்ளிப்பள்ளம் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதர் (19) என்பதும், இவரும் இவரது சக நண்பர்களான கோபாலகிருஷ்ணன், சாரங்கன் ஆகிய மூவரும் ஒன்றாக மயான திடலில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில் ஸ்ரீதரை மற்ற இருவரும் பீர் பாட்டிலால் தலை, முகம், கழுத்து என உடலில் பல்வேறு இடங்களில் தாக்கி கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.
இதனிடையே கோபாலகிருஷ்ணன், சாரங்கன் ஆகிய இருவரையும் காடுபட்டி காவல்துறையினர் கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர். கொலை செய்யப்பட்ட ஸ்ரீதர் மீது வாடிப்பட்டி, சோழவந்தான் காவல் நிலையத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க... மூன்று மாத பெண் குழந்தை அடித்துக் கொலை: தந்தை கைது!