மதுரை: ‘என் மண் என் மக்கள்’ என்ற பெயரில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, நடைபயணம் மேற்கொண்டு உள்ளார். அதன் ஒருபகுதியாக, மதுரை மத்தி மற்றும் தெற்கு சட்டமன்றத் தொகுதிகளுக்குட்பட்ட பெரியார் பேருந்து நிலையம் அருகேயுள்ள கட்டபொம்மன் சிலை முதல் தெப்பக்குளம் வரை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை யாத்திரை மேற்கொண்டார்.
அப்போது பல்வேறு இடங்களில் பேசிய அண்ணாமலை, ''கர்நாடக மாநிலத்தில் பாஜக ஆட்சியில் இருந்தவரை காவிரிப் பிரச்னை எழவில்லை. தற்போது காங்கிரஸ் வந்தவுடன் பிரச்சினை ஆரம்பித்துள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத் தீர்ப்பின்படி ஜூலை மாதம் 31 டி.எம்.சி தண்ணீர் திறந்திருக்க வேண்டும். ஆனால், கர்நாடக அரசு காவிரியில் நீர் திறந்துவிடவில்லை. மேலும், மேகதாதுவில் அணை கட்டுவோம் என்று கூறிவருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருக்கிறார். கர்நாடக அரசிடம் கேட்டு தண்ணீர் பெற முடியவில்லையே ஏன்? பெங்களூருவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் ஏன் இதைப்பற்றி பேசவில்லை?
தமிழை வளர்ப்பதற்கு திமுக அரசு எதுவும் செய்யாததால் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 54 ஆயிரம் மாணவர்கள் தமிழ்ப் பாடத்தில் தோல்வி அடைந்து உள்ளனர். தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு, 10 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை வழங்கி உள்ளது. மோடியின் பெயரால் இங்கே திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுவதில்லை. ஆனால், 87 கோடி ரூபாய் மதிப்பில் பேனா சிலையை திமுக அரசு வைக்கிறது.
தமிழக அரசு இதுவரை வாங்கிய கடனை மட்டும் அடைப்பதற்கு 27 ஆண்டுகள் தேவைப்படும். சிறையில் உள்ள செந்தில் பாலாஜிக்கு மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் கொடுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் குற்றவாளி தான். ஐபோனை தயாரிக்ககூடிய பாக்ஸ்கான் நிறுவனம் மூலம் தமிழகத்திற்கு வரவிருந்த 3500 கோடி முதலீடு கர்நாடகா மாநிலத்திற்கு சென்றுவிட்டது. மக்கள் குடிப்பதற்கு தண்ணீர் இல்லை; ஆனால் டாஸ்மாக்கில் தாராளமாக தண்ணீர் வருகிறது. குடிகாரர்கள் மீது எங்களுக்கு கோபமில்லை, உங்களை குடிக்க வைக்கிற அரசின் மீது தான் எங்களுக்கு கோபம்.
தமிழக டாஸ்மாக்கில் விற்பது எரிசாராயம். அதை குடித்தால் குடல் வெந்து தான் போகும். அது முறையான பரிசோதனை இல்லாமல் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. அதை அருந்தினால் நிச்சயம் மரணம் தான். 90 மி.லி. பாக்கெட் கொடுத்த பின்னர் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கும். எய்ம்ஸ் வேகமாக வர வேண்டும். எனில், ரூ. 2000 கோடியை தமிழக அரசு கொடுக்க வேண்டியது தானே' என்றார்.
பிறகு அண்ணாமலை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 'நம்முடைய தாய் மொழியில் எல்லா கல்வியும் மாற வேண்டும் என்பதில் அமித்ஷா உறுதியாக உள்ளார். ஐந்தாவது தமிழ்ச்சங்கம் எடுத்தவர் பிரதமர் மோடி தான். தமிழ் மொழிக்கு பிரதமர் தொடர்ந்து உறுதுணையாக இருப்பார். ஸ்டாலினுக்கும் உதயநிதிக்கும் ஆக்கப்பூர்வமாக பேசுவதற்கு தெரியாது. அவர்களுக்கு அரசியல் புரிதல் இல்லை. பிரதமர் மோடி, ஹிந்தி தொன்மையான மொழி எனப் பேசியுள்ளார் என்றால் அந்த ஆதாரத்தை காட்டவும். தமிழ் மொழி போல எந்த மொழியும் கிடையாது என பிரதமர் தொடர்ந்து பேசி வருகிறார்.
ராகுல் காந்தி மீண்டும் நாடாளுமன்றம் வருவது நல்லது தான். அப்போது தான் அவர் பாஜகவில் இடங்களை மேலும் அதிகரிக்க உதவி செய்வார். வாழ்வா சாவா தேர்தல் பாஜகவுக்கு அல்ல, திமுகவுக்கு தான். இந்த தேர்தலில் திமுக தோற்றால் அதன் தலைமையில் மாற்றம் வரும். நேர்மையாக உட்கட்சி தேர்தலை நடத்தினால் கனிமொழி தான் திமுகவின் தலைவர் ஆவார். காரணம் குடும்ப ஆட்சி வேண்டாம் என்று திமுகவினரே சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.
செல்லூர் ராஜுவை பொறுத்தவரை அவர் குறித்து நான் சொன்ன கருத்தை ஒருபோதும் மாற்றிக்கொள்ளப்போவதில்லை. 10 ஆயிரம் முறை கேட்டாலும் ஒரே பதில் தான். செல்லூர் ராஜூ குறித்து பேசி என்னுடைய தரத்தை குறைத்துக் கொள்ளப்போவதில்லை' என்றார்.
ஜான்சிராணி பூங்கா அருகே யாத்திரையில் தென் இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினரும் இணைந்து கொண்டனர். அப்போது கூட்டத்தை ஒழுங்குபடுத்த முயன்ற போலீசாருக்கும், பார்வார்டு பிளாக் கட்சி தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அவர்களை போலீசார் உடனே அப்புறப்படுத்தினர். முனிச்சாலை பகுதியில் அண்ணாமலையின் யாத்திரை வந்து கொண்டிருந்த போது, விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் தெற்கு மாவட்ட கொள்கை பரப்பு தலைவர் ஜி.கே.பத்ரி சரவணன் தலைமையில் 10 பேர் கொடியுடன் அண்ணாமலையைச் சந்தித்து கட்டித்தழுவி ஆதரவு அளித்தனர்.