தென்காசியைச் சேர்ந்த ராஜசேகர பாண்டியன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "திருநெல்வேலி முதல் தென்காசி வரை சுமார் 45 கிலோ மீட்டர் தூரம் நான்கு வழி சாலை அமைக்க அரசு திட்டமிட்டது. இதற்கான திட்டம், கடந்த 2018 முதல் 2020இல் முடிவடைய வேண்டும். ஆனால் தற்போது வரை நான்கு வழி சாலை பணிகள் முடிவடையவில்லை.
மேலும், திருநெல்வேலி முதல் தென்காசி வரை உள்ள சாலைகளில் ஏராளமான அபாய வளைவுகள் உள்ளன. ரயில்வே தண்டவாளங்களை கடந்து செல்லும் சூழல் உள்ளது. சாலை ஓரங்களில் உள்ள நிலங்களை தேசிய நெடுஞ்சாலைத்துறை கையகப்படுத்தியுள்ளது. ஆனாலும், இதுவரை பணிகள் நிறைவடையவில்லை.
தற்போதுள்ள சாலை மழையால் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைகின்றனர். இதுகுறித்து உயர் அலுவலர்களுக்குப் பலமுறை மனு அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே திருநெல்வேலி முதல் தென்காசி வரை உள்ள மாநில நெடுஞ்சாலையில் சாலையை விரிவுபடுத்தி, நான்கு வழி சாலையை விரைவாக அமைக்க உரிய உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இவ்வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நெடுஞ்சாலைத்துறை தரப்பில், நான்கு வழிச்சாலை அமைக்கும் பணியை 18 மாதங்களில் முடிப்பதாக உத்தரவாதம் அளிக்கப்பட்டது". அதனை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: 'நிலக்கரி இறக்குமதிக்குத் தடையில்லை' சென்னை உயர் நீதிமன்றம்