மதுரை: தூத்துக்குடி அருகே உள்ள விளாத்திகுளத்தை சேர்ந்தவர் சரவணகுமார். இவரது மகன் காந்திராஜன் (28). வேன் டிரைவரான இவர் மதுரை ஜீவாநகரில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் (மே 27) இரவு மதுரை தெற்குவாசல் ரயில்வே மேம்பாலத்தின் கீழே காந்திராஜன் வெட்டிக் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். அதைப் பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக காவல் துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
பின்னர் இது குறித்து தகவல் அறிந்த தெற்குவாசல் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று காந்திராஜன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை தொடர்பாக கீரைத்துறை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணையில் ஈடுபட்டு வந்தனர்.
தற்போது இந்த கொலையில் தொடர்புடையவர்களை உடனடியாக பிடிக்க வேண்டும் என போலீஸ் உதவி ஆணையர் சண்முகம் உத்தரவிட்டார். அதன் பேரில், இன்ஸ்பெக்டர் முத்து பிரேம்சந்த் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அந்த தனிப்படை போலீசார் கொலையாளிகள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அப்போது போலீசாருக்கு சில திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது. அதாவது, காந்திராஜன் காதல் விவகாரத்தில் வெட்டி கொலை செய்யப்பட்டதும், அவர் காதலித்து வந்த இளம் பெண்ணின் குடும்பத்தினரே அவரை கொலை செய்த தகவலும் வெளியானது.
இதையும் படிங்க: Today Horoscope: மகர ராசிக்கு யோகமான நாள்.. உங்க ராசிக்கான பலன் என்ன?
போலீசார் விசாரணையின் அடிப்படையில், "மதுரை கீரைத்துறையை சேர்ந்த மாயழகு என்பவரின் மகளை காந்திராஜன் காதலித்து வந்துள்ளார். ஆனால் இதற்கு மாயழகுவின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இவ்வாறு இருந்த போதிலும் அந்த பெண்ணிடம் காந்திராஜன் தொடர்ந்து பழகி வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த மாயழகின் மகன் காளிதாஸ் (21) மற்றும் 17 வயது சிறுவனான மற்றொரு மகன் ஆகிய இருவரும் சேர்ந்து திட்டமிட்டு காந்திராஜனை வெட்டி கொலை செய்துள்ளதாக விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
இதைத் தொடர்ந்து காந்திராஜன் கொலை தொடர்பாக மாயழகு மற்றும் அவரது 2 மகன்களையும் போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் அவர்கள் 3 பேரும் நேற்று போலீசாரிடம் வசமாக சிக்கினர். தற்போது கொலைக்கான காரணம் குறித்து 3 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் காதல் விவகாரத்தில் டிரைவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.