தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஆண்டு தோறும் கந்தசஷ்டி உற்சவ திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். தற்போது கரோனா காலம் என்பதால் இந்த ஆண்டு திருவிழாக்கள் அனைத்தும் பக்தர்கள் பங்கேற்பின்றி நடக்கிறது.
இந்நிலையில், இந்த ஆண்டிற்கான கந்தசஷ்டி திருவிழா நவம்பர் 15ஆம் தேதி முதல் காப்புக்கட்டுதல், வேல்வாங்குதல், சூரசம்ஹாரம் மற்றும் பாவாடை கட்டுதல் ஆகிய திருவிழாக்கள் 21ஆம் தேதி வரை ஏழு நாள்கள் விமரிசையாக நடந்து வருகிறது. கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் சிறப்பு வாய்ந்ததாகும்.
திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற சூரசம்ஹார விழாவில் நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் கலந்து கொண்டனர். சூரசம்ஹார நிகழ்விற்கு முன்பாக, காலை 5.30 மணி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு பகல் 12.30 மணியளவில் கோயில் நடை சாத்தப்பட்டது. மாலை நடைபெறும் சூரசம்ஹாரம் நிகழ்வில் கரோனா பரவல் காரணமாக பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
இன்று (நவ.20) மாலை 4.30 மணிக்கு தொடங்கிய சூரசம்ஹாரம் நிகழ்வானது 5.30 மணி வரை கோயில் வளாகத்திற்குள் நடந்து முடிந்தது.
இதையும் படிங்க: வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த திமுக எம்எல்ஏ பூங்கோதை!