மதுரை திருநகர் தனியார் நிறுவனத்தில் வங்கி லாக்கர் திறக்கப்பட்டு அடமான நகை, நான்கு தங்க செயின்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இது தொடர்பாக நிதி நிறுவன மேலாளர் நாகபிரபு அளித்த புகாரின் பேரில் நிதி நிறுவனத்தின் முன்னாள் நகை மதிப்பீட்டாளர் நவநீதன், தற்போதைய நகை மதிப்பீட்டாளர் ரவிகுமார், ஊழியர் காளிதாஸ் ஆகியோர் மீது திருநகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இவர்களில் ரவிகுமார், காளிதாஸ் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். நவநீதன் தலைமறைவாக உள்ளார். இந்நிலையில் ரவிகுமார், காளிதாஸ் ஆகியோருக்கு மதுரை மாவட்ட நீதிமன்றம் பிப்ரவரி 10இல் ஜாமின் வழங்கியது.
இந்த ஜாமீனை ரத்துசெய்யக்கோரி நிதி நிறுவன மேலாளர் நாகபிரபு உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில், ”முதல் குற்றவாளி இன்னும் கைது செய்யப்படாத நிலையில் இருவருக்கு ஜாமின் வழங்கப்பட்டிருப்பதால், குற்றவாளிகள் சேர்ந்து வழக்கு தொடர்பான தடயங்களை அழிக்க வாய்ப்புள்ளது. ஆகவே, இருவருக்கும் வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்ய வேண்டும்" எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், இருவருக்கும் வழங்கப்பட்ட ஜாமினை ரத்துசெய்தும், வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றியும் உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: பணி நிரந்தரம் வேண்டும் - தேசிய சுகாதார இயக்க ஊழியர்கள் போராட்டம்