மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே நிலையூர் 1ஆவது பிட் கண்மாய் உள்ளது. ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களின் பாசன பயன்பாட்டிற்கு மூலமாக இருக்கும் இந்த கண்மாய்க்கு வைகை அணையிலிருந்து வரும் நீர் ஆதாரமாக உள்ளது.
மேலும், இந்த கண்மாயில் இயற்கையாகவே வளர்ந்து வரும் மீன்களை மீன்வளத் துறை கூட்டுறவு சங்கம் ஆண்டுதோறும் இதே காலகட்டத்தில் உள்ளூர் மக்களுக்கு ஏலம்விட்டு மீன் பிடிப்பதற்கான அனுமதி வழங்கும்.
கோடைக்காலமான தற்போது கண்மாயில் நீர் குறைந்து வருவதால் அதிகளவில் உள்ள மீன்களை பிடிப்பதற்கான அனுமதியை வெளியூர் ஆள்களுக்கு மீன்வளத் துறை கூட்டுறவு சங்கம் வழங்கியுள்ளதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த கூத்தியார்குண்டு உள்ளூர் மக்கள், மீன்வளத் துறை கூட்டுறவு சங்கத்தின் இந்த முடிவை கண்டித்து நிலையூர் கண்மாயில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக பேசிய மக்கள், “ கூத்தியார்குண்டு பகுதியைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் மீன்வளத்துறை கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக உள்ளனர். ஆண்டுதோறும் இந்த மீன் பிடிப்பை செய்துவரும் மக்களுக்கு இதுவே வாழ்வாதாரமாக இருந்து வருகின்றது. இந்த நிலையில் 30க்கும் மேற்பட்ட வெளியூர் ஆள்களுக்கு மீன் பிடிப்பதற்கான அனுமதியை மீன்வளத் துறை வழங்கியுள்ளது. இதனை நாங்கள் எப்படி ஏற்க முடியும்?
மேலும், கரோனா நோய் தொற்று பரவக்கூடிய இந்த நிலையில் வெளியூர் ஆள்கள் நிலையூர் கண்மாய் பகுதியில் தங்கி மீன் பிடிப்பதற்கான அனுமதியளித்தால் கரோனா பரவும் அபாயம் உள்ளது.
இதுகுறித்து பலமுறை மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை. மீன்வளத் துறையில் பதியப்பட்டுள்ள உள்ளூர் மக்களுக்கு மீன் பிடிப்பதற்கான அனுமதி வழங்க வேண்டும்” என்றனர்.
இதையும் படிங்க : மழைநீர் வடிகாலில் கழிவு நீர் கலக்கும் அவலம்: முதலமைச்சரிடம் மனு கொடுத்தும் தீராத பிரச்னை!