- " class="align-text-top noRightClick twitterSection" data="">
மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் ஒவ்வொரு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆகமவிதிப்படி கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும். அதன்படி, கடந்த 2009 ஆம் மீனாட்சி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பின், 12 ஆண்டுகள் கழித்து, கடந்த 2022 ஆம் ஆண்டே கும்பாபிஷேகம் நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால் கடந்த 2018 ஆம் ஆண்டு எதிர்பாராத விதமாக நடந்த தீ விபத்து காரணமாக தள்ளிப்போனது.
மேலும், தீ விபத்தில் சேதமடைந்ததை சரி செய்துவிட்டு, 2 ஆண்டுகளுக்குப் பின்னர் கும்பாபிஷேகம் நடைபெறும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. இந்த நிலையில், சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்து, தற்போது கும்பாபிஷேகத்திற்காக பணிகள் துவங்கப்படவுள்ளது. 2009 ஆம் ஆண்டிற்குப் பிறகு, அதாவது சுமார் 14 ஆண்டுகள் கழித்து அடுத்த இரண்டு ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.
தற்போது அதற்கான திருப்பணிகளைத் துவங்கும் பொருட்டு, நேற்று பாலாலய வைபவம் நடைபெற்றது. இந்த வழிபாடுகளில் பெயரளவுக்கே துக்கடா போன்று தமிழ் திருமுறைகள் பயன்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டினார், தெய்வத்தமிழ் பேரவை அமைப்பினர். குடமுழுக்கு நடைபெறும் போதாவது, தமிழும் ஓதப்பட வேண்டும் என்று நிகழ்வுக்காக வந்திருந்த வணிகவரித் துறை அமைச்சர் மூர்த்தியிடம் கோரிக்கை வைத்தனர். பிறகு ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு அவர்கள் பேட்டி அளித்தனர்.
தேனி மாவட்டம் குச்சனூர் இராஜயோக சித்தர் பீடத்தின் மடாதிபதி குச்சனூர் கிழார் பேசுகையில், "மீனாட்சி கோயில் குடமுழுக்கு திருப்பணியின் பொருட்டு பாலாலய பூஜைகள் நடைபெற்றன. தமிழ் குடமுழுக்கை வலியுறுத்தி அதிகாரிகளிடமும், அமைச்சர் மூர்த்தியிடமும் மனு கொடுத்தோம். ஓதுவார்களை பூஜை அறையில் அனுமதிப்பதோடு, பூஜை அறையிலும், மேலே கலசங்களிலும் தமிழ் ஓதப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினோம். இதற்கு முன்னர் தஞ்சையிலும், பழனியிலும் நடைபெற்ற குடமுழுக்கில் தெய்வத் தமிழ்ப் பேரவையின் கோரிக்கை முழுமையாக நிறைவேற்றப்படவில்லை.
அறநிலையத்துறையின் சார்பில் நடைபெறும் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து கோயில்களிலும் குடமுழுக்கில் தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதுதான் தெய்வத்தமிழ்ப் பேரவையின் நோக்கம். இது தமிழர்களின் நோக்கமும் ஆகும். நாங்கள் கேட்பது ஆந்திராவிலோ, கர்நாடகாவிலோ அல்லது கேரளாவிலோ அல்ல. தமிழ் மண்ணில் கேட்கிறோம்.
தமிழ் மண்ணில் தேவாரம், திருவாசகம், திருமுறை, பாசுரம் பாடிய நாயன்மார்கள், ஆழ்வார்கள் இருக்கிறார்கள். அவர்கள் பாடியதைக் காட்டிலும், வேறு எந்த மொழியிலும் மந்திரங்கள் இருப்பதாக எங்களுக்குத் தெரியவில்லை. அவ்வாறு இருந்தால் அவர்கள் பாடட்டும். எங்கள் கோயில் கருவறைகளில் தமிழில்தான் ஓத வேண்டும் என வைக்கம் போராட்டத்தில் பெரியார் தாழ்த்தப்பட்டவர்களை கோயிலுக்குள் அழைத்துச் சென்றார்.
மீனாட்சி கோயிலில் தமிழை முழுமையாகக் கொண்டு செல்ல வேண்டும். தமிழ்நாட்டிலுள்ள அனைத்துக் கோயில்களிலும் குடமுழுக்கு தமிழில்தான் நடைபெற வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு தெய்வத் தமிழ்ப் பேரவை இயங்கி வருகிறது. அந்த அடிப்படையில்தான் இந்த மனுவை அளித்துள்ளோம். அவர்கள் இதனைச் செய்வார்கள் என்று நம்புகிறோம்" என தெரிவித்தார்.
சேலம் மேச்சேரி தமிழ் வேத ஆகம பாடசாலை நிறுவனர் சிம்மம் சத்தியபாமா கூறுகையில், "பாலாலய பூஜையில் சமஸ்கிருதத்திற்கு அளித்த முக்கியத்துவம் தமிழுக்கு அளிக்கப்படவில்லை. ஓதுவார்களை ஒரு ஓரமாக அமர வைத்து ஒலிபெருக்கியின் மூலமாக, தமிழிலும் ஓதினார்கள் என்ற விளம்பரத்திற்காக செய்தார்கள்.
ஆகையால், குடமுழுக்கின்போது சமஸ்கிருதத்திற்கு இணையாக தமிழிலும் ஓதப்பட வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை தெய்வத் தமிழ்ப் பேரவை பெற்றது. ஆனால் அதன்படி, இதுவரை எந்தக் கோயில் குடமுழுக்கிலும் நிகழவில்லை. வேள்விச்சாலையில் அமர்ந்திருப்போர் அனைவரும் சமஸ்கிருதத்தில்தான் ஓதினார்கள். இந்த நிலை மாற வேண்டும்.
தமிழர்களுக்கு தமிழ் வழிபாட்டு உரிமை வழங்கியிருக்கின்றோம் என்று விளம்பரம் செய்தால் மட்டுமே போதாது. தொடர்ந்து இதனை நிறைவேற்ற வலியுறுத்தி தெய்வத் தமிழ்ப் பேரவை அறநிலையத்துறை அமைச்சருக்கும், முதலமைச்சருக்கும், அந்தந்த கோயில் ஆணையருக்கும் மனு அளித்து வலியுறுத்திக் கொண்டே இருக்கிறோம். ஆனால், இதுவரை எதுவும் செயலாக்கம் பெறவில்லை. தமிழர்களுக்குச் சொந்தமான கோயில்களில் தமிழர்கள் நுழைய இடமளிக்க மறுக்கிறார்கள்.
தமிழுக்கு முதன்மையளித்து வாழ்ந்த மதுரை மண்ணில்கூட வழிபாட்டு உரிமை, வேள்வி உரிமை அளிக்கப்படவில்லை என்றால் தமிழும், தமிழுக்கான கருவறையும் அழிந்தது என்றுதான் பொருள். பிற மண்ணைச் சேர்ந்தவர்களால் தொடர்ந்து அழிக்கப்பட்டு வரும் தமிழ் மொழி உரிமை குறித்து தமிழர்கள் விழித்துக் கொள்வது அவசியம். தமிழ்நாடு அரசு தமிழ்மொழி வழிபாட்டை முன்னின்று செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். அவ்வாறு செய்யத்தவறும் பட்சத்தில், வேள்விச்சாலையின் உள்ளே நுழைந்து தமிழால் இறைவனைப் பூசிப்போம்" எனக் கூறினார்.
மதுரை பதிணென் சித்தர் மடத்தைச் சேர்ந்த வடிவேல் கூறுகையில், "ஒவ்வொரு மானுடனும் தெய்வீக நிலை பெற வேண்டுமானால், தமிழில்தான் அனைத்து வழிபாடுகளும் நடைபெற வேண்டும். தமிழ்நாட்டில் தமிழுக்காகப் போராட வேண்டிய அவலநிலை. மிக வருத்தத்திற்குரிய விசயம். மீனாட்சி, சொக்கநாதர் என்பதெல்லாம் தமிழில் உள்ளதென்றால் அவர்களுக்குரிய பூஜையும் தமிழில்தானே இருக்க வேண்டும்" என்றார்.
தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைமை செயற்குழு உறுப்பினர் கதிர்நிலவன் கூறுகையில், "மீனாட்சி கோயிலில் நடைபெற்ற பாலாலய நிகழ்வு முழுவதும் சமஸ்கிருத்தில்தான் நடைபெற்றது. பெயருக்குதான் தமிழில் நடத்தினார்கள். ஓதுவார்களுக்கு முக்கியத்துவம் தரப்படாமல் அவர்களை வெளியே நிறுத்தி வைத்துதான் வழிபாடு நடத்தினார்கள்.
கடந்த 2020 ஆம் ஆண்டு தஞ்சை பெருவுடையார் கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதன் தீர்ப்பில், சமஸ்கிருதத்திற்கு இணையாக தமிழுக்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும். கருவறை, வேள்விச்சாலை, கோபுர கலசங்கள் ஆகிய 3 இடங்களிலும் சரிபாதி தமிழ் இருக்க வேண்டும் என்று அத்தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
ஓதுவார்களும், சமஸ்கிருத பிராமணர்களும் சரிசமமாக அமர்த்தப்பட்டு வழிபாடுகள் நடைபெற வேண்டும் எனவும், இதனை செயல்படுத்த மறுத்தால், தண்டத் தொகையாக ரூ.10 லட்சம் கட்ட வேண்டும் எனவும் அதே தீர்ப்பில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. மேலும் கடந்த 2015 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பிலும்கூட, தமிழில் அர்ச்சனை செய்ய ஆகமத்தில் எந்தவித தடையும் விதிக்கப்படவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.
ஆனால் இந்த தீர்ப்பை பழனி கோயில் குடமுழுக்கில் அமல்படுத்த வலியுறுத்தி அங்கு சென்று நாங்கள் போராட்டம் நடத்தினோம். ஆனால் குடமுழுக்கில் எங்களை அனுமதிக்கவேயில்லை. தமிழில் வழிபாடு என்பது நீதிமன்ற வழிகாட்டுதல்படி நடத்தப்படவில்லை. அதேபோன்று தமிழில் அர்ச்சனை என்று கூறப்பட்டாலும் நடைமுறையில் அவ்வாறு இல்லை என்பதுதான் உண்மை" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: "உதயநிதி கூறியதில் தவறு இல்லை... பாஜகவை அலற விடுகிறார்" - கே.எஸ். அழகிரி கருத்து!