அடுத்த சில வாரங்களில் சிங்கப்பூர் செல்வதற்காக அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டு இருந்த நிலையில் பட்டாசு ஆலையில் வேலை பார்த்த நண்பர்களை பார்க்கச் சென்று விபத்தில் உடல் சிதறி இறந்த இளைஞனின் சோக கதை.
இந்திய ராணுவத்தில் சேர வேண்டும் என்ற கனவில் பல்வேறு பயிற்சிகளை மேற்கொண்டு அதற்காக விடா முயற்சியுடன் போரடி கொண்டிருந்த இளைஞர் விக்கி. மதுரை மாவட்டம் கருமாத்தூர் அருகே உள்ள புளிய கவுண்டன்பட்டியில் தனது அம்மா சுமதி மற்றும் தம்பி ஜெயசீலனோடு வாழ்ந்து வந்தார். சிறுவயதிலேயே அப்பா குடும்பத்தை விட்டு பிரிந்து சென்று, இறந்து விட குடும்பத்தின் மொத்த சுமையையும் விக்கியின் அம்மா சுமதியே தாங்கி தனது இரு ஆண் பிள்ளைகளையும் கஷ்டப்பட்டு படிக்க வைத்தார்.
சுமதி தனது வீட்டின் அருகே உள்ள பட்டாசு கம்பெனியில் தினக் கூலிக்கு வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் பனிரெண்டாம் வகுப்பு முடித்த விக்கி, அதற்கு மேல் படிக்கப் பிடிக்காமல் இந்திய ராணுவத்தில் சேருவதற்கு கடும் முயற்சி மேற்கொண்டார். ஆனால் மருத்துவ பரிசோதனையில் அவரது மூக்கில் சதை வளர்ந்து இருப்பதாக கூறி நிராரிக்கப்பட்டதால் மிகவும் மனமுடைந்து போனார்.
பின்னர் பல்வேறு இடங்களில் வெல்டிங் பணிகளை மேற்கொண்டு வந்தார். இதற்கிடையே சிங்கப்பூர் நிறுவனம் ஒன்றின் நேர்காணலில் வெற்றி பெற்று அதே வெல்டிங் பணியை சிங்கப்பூர் சென்று மேற்கொள்ளும் கனவில் மிதந்து கொண்டிருந்தார். வரும் ஜனவரி முதல் வாரத்தில் சிங்கப்பூர் செல்வதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார்.
இந்நிலையில் அழகுசிறை கிராமத்தின் அருகேயுள்ள பட்டாசு ஆலையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த தனது நண்பர்கள் வல்லரசு மற்றும் கோபியை பார்ப்பதற்காக நேற்று(நவ.10) பிற்பகல் அங்கே சென்று இருந்தார். அப்போது ஏற்பட்ட எதிர்பாராத விபத்தில் தனது நண்பர்களோடு விக்கியும் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுக்குறித்து விக்கியின் தாய்மாமன் குணா தொலைபேசி வழியாக ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திடம் பேசுகையில், ”மிகவும் துறுதுறுவென இருப்பார். வேலைக்கு செல்ல வேண்டும். தன் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும், தம்பியை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என பல்வேறு கனவுகள் அவருக்கு இருந்தன.
தனது தாய் படுகின்ற கஷ்டத்தை பலமுறை என்னிடம் சொல்லி வருந்தி இருக்கிறார். வருகிற ஜனவரி மாதம் சிங்கப்பூர் செல்வதற்கு உரிய ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார். இந்நிலையில் நேற்று நடைபெற்ற விபத்தில் விக்கி இறந்தது தாள முடியாத வேதனையை ஏற்படுத்தியுள்ளது” என்றார்.
விக்கியின் மற்றொரு மாமா உதயகுமார் தொலைபேசி வழியாக நம்மோடு பேசுகையில், ’நன்றாக தான் படித்துக் கொண்டு இருந்தார். ஆனால் அவருக்கு நாட்டுக்கு சேவையாற்ற வேண்டும் என்பது கனவாக இருந்தது. துரதிர்ஷ்டவசமாக இவ்விபத்தில் அவர் இறந்தது வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் பகுதியில் உள்ள பட்டாசு கம்பெனிகளில் பலமுறை விபத்துகள் நிகழ்ந்திருக்கின்றன. இந்த விபத்துகளுக்கு தமிழ்நாடு அரசு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இல்லாவிட்டால் மனிதச் சாவுகள் தொடர்ந்து நிகழ்வது தவிர்க்க இயலாதது ஆகிவிடும்’ என வேதனையுடன் கூறினார்.
பட்டாசு ஆலையின் சிதிலமடைந்த அந்த கட்டிட இடிபாடுகளுக்குள் மனித உடல்களின் உறுப்புகள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. ஒரு கனவு இங்கே கரியாகி காற்றோடு கலந்து போய்விட்டது என்பதுதான் உண்மை. அதில் விக்கியின் கனவு மட்டுமல்ல... இறந்து போன மற்ற உயிர்களின் கனவும் தான் என பலரும் தங்களது வேதனைகளை பதிவு செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: மாலத்தீவு அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்து; தமிழகத்தைச் சேர்ந்த மூவர் உட்பட 9 இந்தியர்கள் பலி..!