மதுரையைச் சேர்ந்த சரவணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் ஒரு பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார்.
அதில், "தமிழ்நாடு முழுவதும் டெங்கு, சிக்கன்குனியா காய்ச்சல் பரவிவரும் நிலையில், அதைத் தடுக்க அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது பருவமழைத் தொடங்கியுள்ள நிலையில், பல குட்டைகளில் தண்ணீர் தேங்கி ஏடிஸ் கொசுக்கள் உருவாகின்றன.
இதனால் மக்களுக்கு டெங்கு, வைரஸ் காய்ச்சல் வருகிறது. மேலும் இந்தக் குட்டைகளில் உருவாகும் ஏடிஸ் கொசுக்களால் டெங்கு காய்ச்சல் பரவுகிறது. இது போன்ற கொசுக்கள் உருவாகாமலிருக்க அரசு சார்பில் கொசு மருந்து அடித்தும், தண்ணீர் தேங்காமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மருத்துவமனையில் தனி வார்டு அமைத்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இது குறித்து அலுவலர்களுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே ஏடிஸ் கொசுக்களைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோருக்கு தனி வார்டு அமைத்து சிகிச்சை அளிக்க உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சிவஞானம், தாரணி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் கூறுகையில், தற்போது டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவிவருகிறது. ஆனால் காய்ச்சலை தடுக்க போதிய தடுப்பு நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறினார். இதையடுத்து நீதிபதிகள் கூறுகையில், 'பொதுநல மனு தாக்கல் செய்யும்போது, மனுதாரர் பொதுவாக குற்றச்சாட்டுகளை முன்வைக்கக் கூடாது. உரிய ஆதாரங்களுடன் பொதுநல மனு தாக்கல் செய்ய வேண்டும். போதிய முகாந்திரம் இல்லாமல் பொதுநல மனு தாக்கல் செய்யக்கூடாது' எனத் தெரிவித்தனர் .
இதைத் தொடர்ந்து அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், உள்ளாட்சித் துறை, சுகாதாரத் துறை, உள்ளிட்டு அனைத்து துறைகளும் இணைந்து போர்க்கால அடிப்படையில் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துவருகிறது எனத் தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், நகராட்சி, உள்ளாட்சி, சுகாதாரம் உள்ளிட்ட துறைகள் இணைந்து தீவிரமாகச் செயல்பட்டால் டெங்கு கொசு உற்பத்தியாவதையும் டெங்கு காய்ச்சலையும் கட்டுப்படுத்தலாம் எனக் கூறி மனுவை முடித்துவைத்தனர்.
இதையும் படிங்க:சுகாதாரச் சீர்கேட்டால் ஏற்பட்ட டெங்கு, மாணவன் பலி!