இந்திய தொழில் கூட்டமைப்பு மற்றும் டெக்ஸ்வேலி இணைந்து நடத்தும் வீவ்ஸ் 2019 ஜவுளி கண்காட்சி நவம்பர் 27ஆம் தேதி தொடங்கி 30ஆம் தேதி வரை ஈரோட்டில் நடைபெறுகிறது. இந்தக் கண்காட்சி குறித்து மதுரையில் டெக்ஸ்வேலி நிர்வாகிகள் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினர்.
இந்திய தொழில் கூட்டமைப்பு மதுரை தலைவர் நாகராஜ் கிருஷ்ணன் கூறுகையில், 'ஜவுளி தொழில்களை மேம்படுத்துவதற்காக நடத்தப்படும் இந்த கண்காட்சியில் சர்வதேச நிறுவனங்களும் பங்கேற்கின்றன. பெரிய அளவிலான நிறுவனங்கள் மட்டுமின்றி சிறுதொழில் நிறுவனங்களும் கலந்து கொள்கின்றன.
இந்திய பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிப்பது ஜவுளித்துறை தான். இந்தியாவில் அதிக அளவிற்கான வேலைவாய்ப்புகள் ஜவுளித்துறை மூலமாகத்தான் வழங்கப்படுகிறது. இது அனைவரையும் கவரும் வகையில் பொருளாதார வளர்ச்சிக்கான கண்காட்சியாக அமையும்' என்றார்.
இதனைத்தொடர்ந்து பேசிய டெக்ஸ்வேலி துணைத் தலைவர் தேவராஜன், 'மதுரையை மையமாக வைத்து 2 ஆயிரம் கோடி அளவிற்கு ஜவுளி பொருளாதாரம் ஈர்க்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் உள்ள அனைத்து ஜவுளித்துறை தொடர்பான தொழில் முனைவோர்கள் இதில் கலந்து கொள்கின்றனர்' என்று தெரிவித்தார்.
டெக்ஸ்வேலி செயல் இயக்குனர் டி.பி.குமார் பேசுகையில், 'தென்னிந்திய அளவில் இரண்டாவது முறையாக நடைபெறும் இந்த ஜவுளி கண்காட்சியில் 25 நாடுகளில் இருந்து 7 ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கிறது. மும்பை, பெங்களூருவில் நடைபெறுவது போன்று ஈரோட்டிலும் நடைபெற இருக்கிறது.
இதில், 550 தொழில் முனைவோர் சந்திப்புடன், உலக தரத்தில் பேப்ரிக் பேஷன் ஷோ நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஜவுளிக் கண்காட்சியைக் காண 10ஆயிரம் பார்வையாளர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கபடுகிறது' என்று விரிவாக எடுத்துரைத்தார்.
இதையும் படிங்க: