ராமநாதபுரத்தைச் சேர்ந்த திருமுருகன், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்நாதன் உள்ளிட்ட பலர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், ‘தஞ்சை பெருவுடையார் கோயில் மிகப் பிரசித்திப்பெற்ற சைவ வழிபாட்டுத் தலமாகும். இக்கோயில் யுனெஸ்கோவால் பாதுகாக்கப்பட வேண்டிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சை பெரிய கோயிலின் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்த உத்தரவிட வேண்டும்’ என்று கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் மத்திய தொல்லியல் துறையின் அனுமதியுடன்தான் தஞ்சாவூர் பெரிய கோயிலில் குடமுழுக்கு நடத்தவுள்ளோம் என்று தஞ்சாவூர் பெரிய கோயில் தேவஸ்தானம் தரப்பில் பதில் மனு தாக்கல்செய்யப்பட்டது. இதனால் தடைக்கோரிய மனு முடித்துவைக்கப்பட்டது.
இதில் கோயில் தரப்பில், தமிழ், சமஸ்கிருதம் ஆகிய இரு மொழிகளிலும் குடமுழுக்கு, முக்கிய பூஜைகள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டன. அப்போது எதிர்தரப்பிற்காக முன்னிலையான வழக்கறிஞர் லஜபதிராய், "கோயிலில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே ஆதிக்கம் செலுத்திவருகின்றனர். ஆனால் அரசின் வேத ஆகம பாடசாலைகளில் அனைத்து ஜாதியைச் சேர்ந்த அர்ச்சகர்களும் பயிற்சிபெற்றுள்ளனர்.
இவர்கள் இரு மொழிகளிலும் புலமைப்பெற்றவர்கள்தான். இவர்களை வைத்து குடமுழுக்கு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்" என்று தெரிவித்தார். மேலும் கோயிலில் தீ விபத்து போன்ற விஷயங்களைத் தவிர்ப்பதற்காக, யாக குண்டங்களைக் கோயிலுக்கு வெளிப்பகுதியில் அமைத்துள்ளோம் எனவும் தெரிவித்தனர்.
இவை அனைத்தையும் பதிவுசெய்துகொண்ட நீதிபதிகள், தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு தொடர்பான வழக்குகளின் தீர்ப்பை நாளைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: ‘தமிழில் மட்டுமே குடமுழுக்கு நடத்தும்வரை ஓயமாட்டேன்’ - பெ. மணியரசன்