மதுரை மாவட்ட அதிமுக அம்மா பேரவை சார்பில், தமிழ்நாடு அரசின் இரண்டாண்டு சாதனையை எடுத்துக்கூறும் வகையில் தொடர் ஜோதி நடைபயணம் மாவட்டத்தின் பத்து இடங்களில் நடைபெற்றது. இதை அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி. உதயகுமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
அப்போது அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசுகையில், ‘தமிழ்நாட்டில் உள்ள ஏழரை கோடி மக்களின் வாழ்வில் ஒளி ஏற்றும் ஜோதியாக இந்த தொடர் ஜோதி நடை பயணத்தில் இளைஞர்கள் பங்கேற்றுள்ளனர். இந்தியாவில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது குறித்து பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில் தமிழ்நாடு தான் முதல் இடத்தில் உள்ளது. ஏன் இந்த விவரங்கள் எதிர்க்கட்சித் தலைவருக்கு தெரியாதா?’ எனக் கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், ‘நிலத்தடி நீர்மட்டம் சென்னையில் வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளதற்கு குடிமராமத்து பணிகள்தான் காரணம். தமிழ்நாட்டில் வெற்றிடம் இருப்பதாக விவாதிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் வெற்றிடம் என்பது இல்லை. அது முதலமைச்சர் பழனிசாமி நோக்கி வருகின்ற வெற்றிடமாக மாறியுள்ளது. முதலமைச்சர் அனுமதி கொடுத்தால் பிரதமர் மோடியை அழைத்து வந்து ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்திக் காட்டுவேம்’ என்றார்.
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில், ‘இந்த ஆட்சி ஆளுவதற்கு தகுதி இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் கூறிவருகிறார். இதேபோல் தான் எம்ஜிஆர்-க்கு பின்னால் அதிமுகவை வழிநடத்த யாரும் இல்லை என்று சொன்னார்கள், ஆனால் ஜெயலலிதா எங்களை சிறப்பாக வழிநடத்தினார். கடந்த இரண்டாண்டுகளாக முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார்கள். இதில் ஆளுமை திறமை எங்கே குறைந்துள்ளது.
நாங்குநேரி வெற்றி என்பது சாதாரண வெற்றி இல்லை. முதலில் இடைதேர்தல் அதிமுக வெற்றி பெற்றவுடன் மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறேன் என்று கூறிய எதிர்க்கட்சித் தலைவர், ஏழு நாட்கள் பின்பு பணம் நாயகம் வெற்றி பெற்றது என்று கூறுகிறார். பிரதமர் மோடி - சீனாஅதிபரை தமிழ்நாட்டில் அழைத்து வந்து சந்தித்தற்கு காரணம் தமிழ்நாட்டில் உள்ள சட்டம் ஒழுங்கு தான் காரணம்’ என்றார்.
இதையும் படிங்க: 'அராஜகப் போக்கை அதிமுக அரசு கைவிட வேண்டும்' - முத்தரசன் காட்டம்!