மதுரையிலிருந்து தெலங்கானா மாநிலம், செகந்திராபாத் நகருக்கும் தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் இருந்து மதுரைக்கும் கோடைக்கால சிறப்பு ரயில்கள் இயக்க தெற்கு மத்திய ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. தெலங்கானா மாநிலத்தில் ஹைதராபாத் மற்றும் செகந்திராபாத் இரட்டை நகரங்களுக்கு இடையே உள்ள தூரம் 7 கிலோமீட்டர் மட்டுமே.
அதன்படி ஹைதராபாத் - மதுரை சிறப்பு ரயில் (07253) ஹைதராபாத்தில் இருந்து மே 19ஆம் தேதி வியாழக்கிழமை அன்று பகல் 03.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் வெள்ளிக்கிழமை மதியம் 02.40 மணிக்கு மதுரை வந்து சேரும்.
அதேபோல மறு மார்க்கத்தில் மதுரையில் இருந்து செகந்திராபாத்துக்குச் செல்லும் சிறப்பு ரயில் (07254) மே மாதம் 20ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று மாலை 05.40 மணியளவில் புறப்பட்டு, மறுநாள் சனிக்கிழமை மாலை 04.00 மணிக்கு மதுரை வந்து சேரும்.
இந்த ரயில்கள் திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாச்சலம், விழுப்புரம், திருவண்ணாமலை, காட்பாடி, ரேனிகுண்டா, கூடூர், நெல்லூர், ஓங்கோல், தெனாலி, குண்டூர், சட்டெனப்பள்ளி, மிரியால்குடா, நலகொண்டா ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதிப் பெட்டி, 5 குளிர்சாதன மூன்று அடுக்கு படுக்கை வசதிப் பெட்டி, 10 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதிப் பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள், 2 பொது பெட்டியுடன் கூடிய ரயில் மேலாளர் பெட்டி இணைக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதையும் படிங்க : முன்பதிவில்லாத சிறப்பு விரைவு ரயில்கள் - தெற்கு ரயில்வே அறிவிப்பு