ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் வட்டத்தைச் சேர்ந்த முதுகுளத்தூர் ஆதி திராவிடர் ஆழ்துளைக்கிணறு விவசாய சங்கத் தலைவர் பூபதி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், 'ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர், கடலாடி, கமுதி போன்ற வட்டங்களில் இருந்து, சுமார் 192 பேர் இந்த சங்கத்தில் உறுப்பினராக உள்ளனர்.
இப்பகுதியில் 600க்கும் மேற்பட்ட ஆதி திராவிடக் குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களுக்கு முதன்மைத் தொழில் விவசாயமாகும். விவசாயத்திற்குத் தேவையான மானியம் பெற்றுத் தருவது, அரசு கடனுதவி பெற்றுத் தருவது போன்று ஆதி திராவிட விவசாயிகளுக்கு உதவிகளை செய்து வருகிறோம்.
இதன்படி 2009ஆம் ஆண்டு ரூ.10 லட்சம் மதிப்பில் விவசாய நிலங்களில் ஆழ்துளைக் கிணறு மோட்டார் வசதியுடன் செய்து தருவதற்காக 43 ஆதி திராவிடர் விவசாயிகளுக்கு தாட்கோ மூலம் நிதி உதவியாக, தலா ஒவ்வொரு விவசாயிக்கும் 100 விழுக்காடு மானியம் (ரூ. 2.50 லட்சம்) வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தற்போது இப்பகுதியில் உள்ள 177 ஆதி திராவிட விவசாயிகளுக்கு விவசாய நிலங்களில் ஆழ்துளைக் கிணறு அமைப்பதற்கு ரூபாய் 10 லட்சம் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு பிற்படுத்தப்பட்டோர் வாழ்க்கை உயர்வுக்காக, தமிழ்நாடு அரசுக்கு 120 கோடி ரூபாயை தேசிய பட்டியல் சாதிகள் நிதி மற்றும் மேம்பாடுத் திட்டம் (NSCFDC) மூலம் வழங்கியுள்ளது. இதனை தாட்கோ முழுமையாக உபயோகப்படுத்த வில்லை.
இது தொடர்பாக உயர் அலுவலர்களுக்குப் பல முறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, 177 ஆதி திராவிட விவசாயிகளுக்கு முறையான மானியம் அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்' என மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனு குறித்து ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை முதன்மைச் செயலர் இரண்டு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.