திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரத்தைச் சேர்ந்த குமார், தனது மகள் பேபிகலாவை மீட்டு ஆஜர்படுத்தக் கோரி ஆட்கொணர்வு மனு ஒன்றினை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் வைத்தியநாதன், ஆனந்த வெங்கடேஷ் அமர்வு விசாரணைக்கு வந்தது.
விசாரணையின் போது ஆஜராகியிருந்த பேபிகலா, "நான் இன்ப சத்யா என்பவரைக் காதலிக்கிறேன். அவருடன் செல்லதான் எனக்கு விருப்பம். எனது அப்பாவுடன் செல்ல விருப்பமில்லை " என்று தெரிவித்தார்.
வழக்கைப் பொருத்தவரை, பேபிகலா பதினெட்டு வயது நிரம்பியவர் என்பதால் அவருடைய முடிவில் நீதிமன்றம் தலையிட இயலாது. ஆனால் அவர் காதலிப்பதாக கூறும் இன்பசத்யாவிற்கு 19 வயது மட்டுமே நிரம்பியுள்ளது. சட்டப்படி அவர் தனது 21 வயதில் தான் திருமணம் செய்ய இயலும். ஆகையால் பேபி கலா இரண்டு ஆண்டுகள் விடுதியில் தங்கி கல்லூரிப் படிப்பை முடிக்கட்டும்.
அதன் பின்னர் இருவரும் சேர்ந்து திருமணம் குறித்து முடிவெடுக்கலாம் என உத்தரவிட்டு வழக்கை தள்ளுபடி செய்தார்.